தனியார் பேருந்தின் அதிவேகம் நசுங்கி பலியான 5 உயிர்கள் வேகக்கட்டுப்பாடு இல்லையா ? வேகத்தடையில் கூட குறையாத அதி வேகம்
சேலத்தில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று வேகத்தடையில் மெதுவாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை இடித்து தள்ளிக் கொண்டு முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். சண்முகா பேருந்தின் தறிகெட்ட வேகத்தால் நிகழ்ந்த விபரீத விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மனைவி நந்தினி மற்றும் குழந்தையுடன் சுக்கம்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் சேலம் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அருகில் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அந்த பகுதியில் உள்ள வேகத்தடையை கடப்பதற்கு முன்னால் சென்ற லாரி வேகத்தை குறைத்ததால், முருகனும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினரும் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்ததாக கூறப்படுகின்றது.
இவர்களுக்கு பின்னால் சேலம் பேருந்து நிலையம் நோக்கி அதிவேகத்தில் வந்த சண்முகா என்ற தனியார் பேருந்து அந்த இரு சக்கர வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு லாரியின் பின் பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் தலைக்கவசம் அணியாத முருகன், அவரது மனைவி நந்தினி, குழந்தை கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் கணவர் லட்சுமணன் மற்றும் குழந்தைகளுடன் வந்த வேத வள்ளி என்ற பெண் மட்டும் பலியானார். மருத்துவமனை செல்லும் வழியில் வேதவள்ளியின் தங்கையின் குழந்தை கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தது.
முருகன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் , அந்த தனியார் பேருந்துக்குள் சிக்கியதால் அதில் அமர்ந்திருந்த நந்தினியின் சடலமும் பேருந்துக்குள் சொறுகிக் கொண்டது. பேருந்தில் இருந்த சில பயணிகளும் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்
வேகத்தடை இருப்பது தெரிந்தும் வேகத்தை குறைக்காமல் பேருந்தை இயக்கி கோர விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் ஒட்டு மொத்தமாக 5 பேர் உயிரிழந்த நிலையில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு நிலையில் பலியான முருகன் குடும்பத்தில் அந்த நிவாரண தொகையை பெறுவதற்கு கூட ஒருவர் கூட இல்லாமல் 3 பேருமே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. அதே போல உசிலம்பட்டி அருகே அதிவேகத்தில் சென்ற அரசு பேருந்து முன்னால் சென்ற இருசக்கரவாகனத்தில் மோதியதில், அய்யனார்குளத்தை சேர்ந்த மணி என்பவர் தலை நசுங்கி பலியானார்
Comments