சமூக வலைதளத்தில் விமர்சித்த ரசிகர் கட்டிப்போட்டு சித்ரவதை செய்து கொலை ஜெயிலுக்கு போன சேலஞ்சிங் ஸ்டார்..! காதலி - 13 பேரை தட்டி தூக்கியது போலீஸ்

0 1315

சமூக வலைதளங்களில் விமர்சித்தவரை கட்டிப்போட்டு  சித்தரவதை செய்து கொலை செய்ததாக , கன்னட திரை உலகில் சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் முன்னனி நடிகர் தர்சன் தனது காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கன்னட திரை உலகின் முன்னனி நடிகராக விளங்குபவர் தர்ஷன். இவரை சேலஞ்சிங் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி உள்ளார்

கர்நாடக மாநிலம் , சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள கால்வாயில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

ரேணுகா சுவாமி கடந்த சில மாதங்களாக கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான தர்ஷன் , அவரது காதலி பவித்ரா கௌடா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தான் அவர் மாயமாகி உள்ளார். ரேணுகா சுவாமி உடல் கண்டெடுக்கப்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ஐந்து பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தனர்.

சமூக வலைதள விமர்சனத்தால் உண்டான கோபத்தில் நடிகர் தர்ஷன், காதலி பவித்ரா கௌடா ஆகிய இருவரும் அடியாட்களை ஏவி ரேணுக்காசாமியை கடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது. பெங்களூரு நகரில் உள்ள ஒரு கேரேஜில் வைத்து அடித்து துன்புறுத்தியதோடு, நாயை விட்டு கடிக்க வைத்து சித்ரவதை செய்ததாகவும், அதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், கொலையை மறைக்க சடலத்தை சாக்கடை கால்வாயில் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

குற்ற செயலில் ஈடுபட்டதாக பத்து பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார் செவ்வாய் கிழமை அதிகாலை மைசூர் நகரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த தர்ஷனை அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலைக்கு மூல காரணமான பவித்ரா கௌடாவை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவரையும் கைது செய்தனர். தர்ஷன் , பவித்ரா கவுடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் செல்போன் எண்கள் கொலை நடந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்ததை காவல்துறை தொழில்நுட்ப ரீதியாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் ? யார்? என்று தர்ஷன் மற்றும் பவித்ராவிடம் வாக்குமூலம் பெற்றனர். நடிகர் தர்ஷனை பெங்களூரு கோரமங்கலா பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். கொலை தொடர்பாக பல சாட்சியங்களை திரட்ட வேண்டியது உள்ளது குற்றவாளிகளிடம் இருந்து செல்போன் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
கார் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தர்ஷன், காதலி பவித்ரா கௌடா உள்ளிட்ட 13 பேருக்கும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி விஸ்வநாத் சி கவுடா உத்தரவிட்டார்.

முன்னனி நடிகர்களின் ரசிகர்கள் தங்களுக்கு வேண்டாத நடிகர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பது வழக்கமான ஒன்று என்றாலும் குடும்ப ரீதியாக இறங்கி விமர்சித்ததால் பொறுக்க இயலாமல் தர்ஷன் இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தேர்தலில் நடிகர் தர்ஷன் பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments