மகனை தொலைத்த தாயின் 33 ஆண்டு கால போராட்டம் இணைத்து வைத்த நல் உள்ளங்கள்...!

0 1035

விமானப்படை முன்னாள் அதிகாரியான தனது மகனை காணாமல் 33 ஆண்டுகளாக தேடி வந்த தாய்க்கு உதவியாக வந்த சில நல்ல உள்ளங்கள், மனநல பாதிப்போடு அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தவரை மீட்டு தாயோடு சேர்த்ததோடு, அவரது ஓய்வூதியப் பலன்களையும் பெற்றுக் கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு சென்னையில் நடந்தேறியது.

33 ஆண்டு தேடுதலின் பலனாக கிடைத்த மகனை முகமெல்லாம் மகிழ்ச்சியாய் வாஞ்சையுடன் பார்க்கும் 92 வயது தாய் பாப்பம்மாள் தான் இவர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த பாப்பம்மாளின் மகன் விநாயகம். விமானப்படை சேவையில் இருந்த போது மனநிலை பாதிக்கப்பட்டதால் 1984 ஆம் ஆண்டு விநாயகத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

தனது மகளின் அரவணைப்போடும், ஓய்வூதியமாக கிடைத்து வந்த பணத்தையும் வைத்து மகனை பராமரித்து வந்துள்ளார் பாப்பம்மாள். அங்குள்ள கோயிலில் படுத்திருப்பதையும் எங்காவது சென்று விட்டு திரும்பி வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த விநாயகம் நீண்ட நாட்களாக திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடத் துவங்கினர்.

ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் உரிய சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், பாப்பம்மாவால் அதனை சமர்பிக்க முடியாத நிலை ஏற்படவே 1991 ஆம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

போதிய வருமானம் இல்லாத நிலையிலும், மகனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்த பாப்பம்மாள், மகன் பணியாற்றியதற்கான சான்றிதழ்களை தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

தனது நிலையை விளக்கி விமானப்படை ஊழியர்கள் சங்கத்தின் உதவியை நாடிய பாப்பம்மாள், கடந்தாண்டு சென்னை ஆவடியில் காவல் துறை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உதவி கோரினார்.

விநாயகம் பணியாற்றியதற்கான ஆவணங்களை திரட்டும் பணியில் சங்கம் ஈடுபட்டிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் எவ்வித சலிப்பும் இல்லாமல் அவரது நண்பர்களும் உறவினர்களும் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு வழியாக, திருத்தணியில் கோயில் ஒன்றில் விநாயகம் யாசகம் பெற்று வருவதை தெரிந்துக் கொண்டு அங்குச் சென்று அவரை மீட்ட அவரது நண்பர்கள், தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளார் ஜெயசீலன் முன்பு ஆஜர்படுத்தினர். ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு நிலுவைத் தொகையில் முதற்கட்டமாக 11 லட்சம் ரூபாயும், மாதந்தோறும் 38 ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கான ஏற்பாட்டினையும் செய்துக் கொடுத்தார் அந்த அதிகாரி.

தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுத்த விநாயகத்திடம், உன்னால் உனது தாயார் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார் என்று கூறியதும் அவரை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வந்து விட்டது எனத் தெரிவித்தார் அதிகாரி ஜெயசீலன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments