டுவிஸ்ட் நடக்குமா..? அணி மாறுமா..? காத்திருக்கும் இண்டி கூட்டணி அதிரடியாக அறிவித்த சந்திரபாபு..! மீண்டும் ஆட்சி கட்டில் பா.ஜ.க வசம்

0 1231

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா கட்சி தீவிரம் காட்டிவரும்  நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்துள்ளதால், இண்டிக்கூட்டணி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டிக்கூட்டணி 40 இடங்களையும் ஒட்டு மொத்தமாக கைப்பற்றியது. அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்றாலும் பா.ஜ.கவால் தனித்து ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 273 இடங்கள் தேவை. இந்த நிலையில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்து 16 தொகுதிகளில் வென்றுள்ள தெலுங்குதேசம் கட்சியையும், 12 தொகுதிகளை கைப்பற்றியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தையும தங்கள் பக்கம் இழுக்க இண்டிக்கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு அரசியல் ராஜதந்திரங்களை கையாண்டனர்.

ஒட்டு மொத்தமாக 234 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள இண்டிக்கூட்டணி எப்படியாவது ஆட்சி அமைத்து விட வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு அரசியல் வியூகங்களையும் கையாண்டு வருவதாக கூறப்படுகின்றது.

பா.ஜ.கவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று உத்தவ்தாக்கரே பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். மெஜாரிட்டிக்கு போதிய இடங்கள் தங்கள் கூட்டணிக்கே இல்லாத நிலையிலும் , ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருப்பதாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கேவும் அறிவித்தனர்

சந்திரபாபுவும், நிதிஷ்குமாரும் அணி மாறுவார்கள் என்று இண்டிக்கூட்டணி காத்திருந்த நிலையில், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக அதிரடியாக அறிவித்தார் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவரும் ராஸ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியும் ஒரே விமானத்தில் டெல்லி சென்ற நிலையில் அவரும் பா.ஜ.கவின் பக்கம் தான் உள்ளார் என்பதால் இண்டிக்கூட்டணி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தலா 3 முக்கிய கேபினட் மந்திரிகள் மற்றும் இரு இணை அமைச்சர் பொறுப்புகள் கேட்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கடிதம் பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமைக்கோரி குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments