45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர்..! வள்ளுவர் பாதத்தில் தலை சாய்த்து மரியாதை.!!

0 811

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் மேற்கொண்ட தியானத்தை நேற்று பிற்பகலில் நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

2014-இல் பிரதாப்கர். 2019-இல் கேதர்நாத். 2024 மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்து தியானம் செய்ய பிரதமர் தேர்வு செய்த இடம், கன்னியாகுமரி.

கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மாலை 7 மணி வாக்கில் விவேகானந்தர் பாறை மண்டபத்தில் தியானத்தை துவக்கினார். காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் விவேகானந்தர் சிலை முன் அமர்ந்து பிரதமர் தியானம் மேற்கொண்டார்.

கடந்த 2 நாட்களாக அதிகாலைகளில் தாம் கொண்டு வந்த வெண்கலக் கெண்டியில் இருந்த கங்கை தீர்த்தத்தை சிறிது சிறிதாக கடலில் ஊற்றி, கங்கா வழிபாடும் சந்தியா வந்தனமும் செய்த பிரதமர், ஒரு சில நேரங்களில் அறையில் இருந்து வெளியே வந்த போது ருத்ராட்ச மணிகளை உருட்டி, ஜெபம் செய்தபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார்.

மாலை 3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர், வேட்டி, சட்டை அணிந்து விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையின் வலது பாதத்தில் ரோஜா மாலை அணிவித்து தலை வணங்கி கும்பிட்டார்.

133 அடி உயர வள்ளுவர் சிலையை சுற்றி வந்த பிரதமர், அங்கிருந்தபடி கடலை ரசித்தார்.

வள்ளுவர் சிலையில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் 3 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மீன்பிடிபடகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments