துணிக்கடையா? செருப்புக்கடையா? கன்பியூசான ரௌடிகள்.. பெட்ரோலுக்கு காசு இல்லாததால் மண்ணெண்ணெய் குண்டு..!
சென்னையில் துணிக்கடையில் மாமூல் கேட்ட ரௌடியை போலீசார் கைது செய்த ஆத்திரத்தில் அக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்த அவனது கூட்டாளிகள், பெட்ரோல் வாங்க பணம் இல்லாமல், மண்ணெண்ணெய் குண்டை எடுத்துச் சென்று துணிக்கடை என நினைத்து, பக்கத்திலிருந்த செருப்புக்கடை மீது வீசிச் சென்றுள்ளனர்...
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் பழைய வண்ணாரப்பேட்டையில் செருப்புக் கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை மதியம் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்ற நிலையில், கடையின் ஷட்டரில் மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.
இது பற்றிய புகாரின்பேரில் போலீசார் விசாரணையில் இறங்கிய போது, மண்ணெண்ணெய் குண்டை வீசியது கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷும், 17 வயதான இரண்டு சிறுவர்களும் என்பது தெரியவந்தது.
விசாரணையில் செவ்வாய்கிழமை அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய நாகராஜ் என்கிற ரௌடியை போலீசார் கைது செய்துள்ளனர். தன் மீது புகார் செய்தவரை ஏதாவது செய்ய வேண்டும் என நண்பன் விக்னேஷிடம் நாகராஜ் கூறியுள்ளான். இதனையடுத்து தனது மைனர் கூட்டாளிகளுடன் கடை மீது பெட்ரோல் குண்டு வீச முடிவெடுத்த விக்னேஷ், பெட்ரோல் வாங்கக் காசு இல்லாததால், அவரவர் வீடுகளில் இருந்த மண்ணெண்ணெயை கொண்டு வரச் செய்து, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றுள்ளான்.
ஆனால் அங்கு சென்றபின் நாகராஜ் சொன்ன துணிக்கடை எது என்று தெரியாமல், பக்கத்தில் பூட்டிக் கிடந்த சாகுல் ஹமீதுவின் செருப்புக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டை வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.
Comments