3 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் எங்கெங்கு செல்ல உள்ளார்?
மூன்று நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக பாரதிய ஜனதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளை மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வந்தடையும் பிரதமர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன்பிறகு பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொள்ளும் பிரதமர், பின்னர் படகு மூலம் விவேகானந்தர் பாறையைச் சென்றடைவார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அங்கு சுவாமி விவேகானந்தர் தியானம் மேற்கொண்ட அதே இடத்தில் இரவு பகலாக தியானத்தில் ஈடுபடும் பிரதமர், பின்னர் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2014-ல் மக்களவை தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, மகாராஷ்டிராவில் உள்ள மராட்டிய மன்னர் சிவாஜியின் புகழ் கூறும் பிரதாப்காட் கோட்டையை பிரதமர் பார்வையிட்டார். 2019-ல் கேதார்நாத்தில் உள்ள குகையில் பிரதமர் தியானம் செய்தார். அதேபோல, இம்முறை அவர் கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments