அய்யா காப்பாத்துங்க.. சாலையில் படுத்து உருண்டு அடிவாங்கும் முன்பே அலறல்..! ரூ.500 கோடி சுருட்டியவர் ஆக்டிங்
500கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவானதாக கூறப்பட்ட BTM குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனரை சேலத்தில் உள்ள லாட்ஜில் வைத்து முதலீட்டாளர்கள் மடக்கிப்பிடித்தனர். தன்னை யாரும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, அடி விழும் முன்பே , அவர் சாலையில் படுத்து உருண்டு மயக்க நாடகமாடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
500 கோடி ரூபாய் மக்கள் பணத்தை விழுங்கிய புகாருக்குள்ளானதால் சாலையில் படுத்து உருண்டு ஆக்டிங் கொடுக்கும் இவர் தான் BTM குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனர் தீபக் திலக்..!
திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் என்.கடையூர் பகுதியை சேர்ந்தவர் தீபக் திலக். இவர் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு BTM குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் தொடங்கி உள்ளார்.
இந்த நிறுவனத்தில் குறைந்த முன் பணம் 8000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பொருட்கள் வாங்கினால் 20 மாதத்தில் முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் தரப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளார் தீபக் திலக். இதனை நம்பி சுமார் 4000 பேர் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர் முதலீடு செய்த மக்களுக்கு முதல் மாதம் மட்டும் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் அதன் பின்னர் முதலீடு செய்த மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக பணத்தை வழங்காததால் சுமார் 500 கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பணத்தை இழந்த மக்கள் தீபக் திலக்கை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் சேலத்தில் ஒரு லாட்ச்ஜில் தங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். முதலீட்டாளர்கள் கையில் சிக்கியதும், பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . அப்போது எங்கே அவர்கள் தன்னை அடித்து நொறுக்கி விடுவார்களோ.. என்று பயந்து சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக சாலையில் படுத்து உருண்டு அழிச்சாட்டியம் செய்தார் தீபக்..!
சாலையில் படுத்து கொண்டு என்னை காப்பாற்றுங்கள் எனக் கூறி கூச்சலிட்டுக் கொண்டிருந்த தீபக்கை அங்கு வந்த அழகாபுரம் காவல் துறையினர் மீட்டு விசாரித்தனர். இரு சக்கர வாகனம் ஒன்ரில் அமர்ந்து கொண்டு தனது சீட்டிங் வரலாற்றை போலீசாரிடம் விவரித்தார் தீபக்..!
பண மோசடியில் ஈடுபட்டதை தீபக் ஒப்புக் கொண்டாலும் தான் முதலீடு செய்த இடத்தில் இருந்து பணம் வரவில்லை என்றும் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் தீபக் தெரிவித்த நிலையில் முதலீட்டாளர்களிடம் இருந்து தீபக்கை மீட்டு காவல் நிலையம் அழைத்துசசென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இரட்டிப்பு பணம் தருவதாக எந்த ஒரு பைனான்ஸ் நிறுவனம் கூறினாலும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி முதலீடு செய்தால் இவர்களை போல பணத்தை பறி கொடுத்து விட்டு காவல் நிலையம் முன்பு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!
Comments