சுற்றுலா வந்த இடத்தில் பழுதான வாகனம் வழிதவறிச் சென்றவர்களின் திக்...திக்..நிமிடங்கள் கும்மிருட்டில் தத்தளித்தவர்களை மீட்ட வனத்துறையினர்!
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், வாகனம் பழுதாகி வழிதவறி திசை மாறிச் சென்ற நிலையில், வனத்துறையினர் அவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கொடைக்கானலிலுள்ள சுற்றுலா தலங்கள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு மூடப்படுவது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 9 சுற்றுலாப்பயணிகள் வேன் ஒன்றில் கொடைக்கானல் சென்றுள்ளனர். பைன் மர சோலை, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்த பின், பிற்பகல் வேளையில் மோயர் சதுக்கம் சென்றபோது, அவர்கள் சென்ற வாகனம் பழுதாகி பாதி வழியில் நின்றுள்ளது.
வேன் சீராகும்வரை மற்ற இடங்களை நடந்து சென்று சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பிய 9 பேரில் 3 பேர் மட்டும் இருட்டுவதற்குள் பத்திரமாக பேருந்து நிலையத்தை அடைந்துள்ளனர். மற்ற ஆறு பேரை செல்போனில் அழைக்க முற்பட்டபோது சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, வியாபாரிகள் அனைவரும் சென்றுவிட்ட நிலையில், வழிதவறிச் சென்ற ஆறு பேரும், இருளில் திக்குத் தெரியாமல் சுற்றியுள்ளனர். வேன்பழுதாகி நின்ற இடத்துக்கு நடந்தே சென்றவர்கள் வழியில் காட்டெருமைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு வழியாக மோயர் சதுக்கம் டிக்கெட் கவுண்டரை அடைந்து, யாருமில்லாத அந்த கட்டடத்துக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சுற்றுலா வேன் ஓட்டுநர்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய வனத்துறையினர் மோயர் சதுக்கம் வந்தடைந்தபோது, டிக்கெட் கவுண்டரில் தஞ்சமடைந்தவர்கள் அவர்களைப் பார்த்துவிட்டு கண்ணாடி ஜன்னல் வழியே செல்போன் டார்ச்சை ஒளிர விட்டுள்ளனர். இதனையடுத்து 6 பேரையும் மீட்டு தங்கள் ஜீப்பிலேயே அழைத்துச் சென்ற வனத்துறையினர் பத்திரமாக உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு வருபவர்கள் உடன் வருபவர்களை விட்டு தனியாக பிரிந்து செல்லக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தும் நிலையில், மாலையில் சுற்றுலாத் தலத்தை பூட்டுவதற்கு முன்பயணிகள் யாராவது இருக்கின்றனரா என சோதனை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments