பார்க்கனும் போல ஆசையா இருக்கு.. செல்போன் திருடனின் மண்டையை அடித்து உடைத்த 4 சிங்கப்பெண்கள்..! ஆசையாக பேசி ஆப்பு வைத்த சம்பவம்

0 1089

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 3 செல்போன்களை திருடிச்சென்ற திருடனை, சாமர்த்தியமாக பேசி மீண்டும் அறைக்கு வரவழைத்த 4 சிங்கப்பெண்கள் அவனை குளியலறைக்குள் பூட்டி வைத்து, அடித்து மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தனர். அவர்கள் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்கிய போது உள்ளே புகுந்த திருடன் ஒருவன், அதில் 3 பெண்களின் செல்போன்களை திருடிச்சென்றதாக கூறப்படுகின்றது. மறு நாள் தோழியின் செல்போனில் இருந்து களவு போன தங்களின் செல்போனை தொடர்பு கொண்ட போது, எதிர் முனையில் பேசியவன் எங்கு இருக்கிறான் ? என்பதை சாமர்த்தியமாக தெரிந்து கொண்டனர். பின்னர் அவனிடம் விரும்பி பேசுவது போல நடித்து அவனை செல்போனுடன் தங்கள் இருப்பிடத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்

செல்போன் திருடனோ உஷாராகி... வர மறுத்ததோடு, தன்னுடன் அரைமணி நேரம் தனிமையில் இருந்தால் செல்போனை திருப்பி தருவதாக பெண்ணிடம் நிபந்தனை விதித்துள்ளான்

இரு தினங்களாக போக்கு காட்டிய செல்போன் திருடனுடன் , தனது தோழிகள் அறிவுறுத்தலின் படி காதல் மொழி பேசிய அந்த பெண். ஒரு கட்டத்தில் அவனை திருமணம் செய்து கொள்வதாக கூறியதோடு, திருடப்பட்ட செல்போன்களுடன் தாங்கள் தங்கி இருக்கும் அறைக்கே வந்து தன்னை கூட்டிச்செல்லுமாறு கூறியுள்ளார்

செல்போனும் கிடைத்து, செல்போனுக்குரிய பெண்ணும் கிடைக்க போகிற மகிழ்ச்சியில் நள்ளிரவில் அறைக்கு வந்தவனிடம், தங்கள் செல்போன்களை பெற்று கொண்ட அந்தப் பெண், அவனை சாமர்த்தியமாக குளியல் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார். பின்னர் மற்ற பெண்களுடன் சேர்ந்து அவனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்து கொடுத்தனர்.

அந்த பெண்களிடம் போலீசில் புகார் அளிக்காமல் இதுபோல செய்யகூடாது என்று எச்சரித்துவிட்டு, தலையில் காயத்துடன் கதறிய செல்போன் திருடனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார். விசாரணையில் அவர் செங்கல்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே 3 மனைவிகள் இருக்கும் நிலையில் செல்போனை திருடி வைத்துக் கொண்டு 4 வதாக ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டதால் மண்டை முழுவதும் கட்டுடன் சுதாகர் , மருத்துவமனையில் மையம் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments