யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு - 6 பேர் கைது
யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெயரிலான யூடியூப் பக்கத்தில் தேர்தல் முறைக்கு எதிராகவும், உலகம் முழுவதும் கிலாபத் என்ற இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவருவது குறித்தும் வீடியோ வெளியிட்டு பரப்புரை செய்த அமீர் உசேனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில், அமீர் உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் 1953 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டில் நிறுவப்பட்ட ஹஸ்ப் உத் தஹீரிர் என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தது தெரியவந்தது. துருக்கியில் 1924ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒட்டோமான் காலிஃபா ஆட்சி என்ற இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிறுவ வேண்டும் என்பதும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கத்தின் பிரதான நோக்கமாகக் கூறப்படுகிறது.
தங்களது யூடியூப் வீடியோவிற்கு லைக் போடும் நபர்களை சென்னை இராயப்பேட்டையில் நடத்தும் ரகசிய கூட்டத்திற்கு வரவழைத்து மூளைச்சலவை செய்து இந்த அமைப்பில் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டதின் கீழ் மூவரையும் கைது செய்த போலீசார் இராயப்பேட்டை, தாம்பரம், தண்டையார்பேட்டையில் நடத்திய சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், செல்போன், சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், மூளையாக செயல்பட்ட அமீர் உசேன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments