அடித்துத் தூக்கிய இன்னோவா! 10 அடி உயரம் பறந்த இளைஞர்!! சென்டர் மீடியனைத் தாண்டி விழுந்து பலியான சோகம்!!

0 1017

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அதி வேகமாக சென்ற இன்னோவா கார் மோதி, 10 அடி உயரம் தூக்கி வீசப்பட்டு, சென்டர் மீடியனைத் தாண்டி, சாலையின் மறுபக்கம் சென்று விழுந்து உயிரிழந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட் என்கிற ஆகாஷ். கேட்டரிங் வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய் இரவு 11-30 மணிக்கு தனது நண்பர்களுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டேவிட்டை, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு நோக்கி அதிவேகமாக சென்றதாக கூறப்படும் இன்னோவா கார் மோதியது. இதில் 10 அடி உயரம் தூக்கி வீசப்பட்ட டேவிட், செண்ட்டர் மீடியனைத் தாண்டி சாலையின் எதிர் திசையில் சென்று விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதால், டேவிட்டுடன் இருந்த இளைஞர்கள் பக்கத்தில் இருந்த ஆட்டோவை எடுத்துக் கொண்டு விரட்டிச் சென்றனர். வழியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். அமைந்தகரை ஸ்கைவாக் அருகே காரை மடக்கிப் பிடித்த அவர்கள் ஆத்திரத்தில் காரை அடித்து நொறுக்கினர்.

காரை ஓட்டிய நபரை வெளியே இழுத்து தாக்குவதற்குள் போலீசார் வந்து சேர்ந்தனர். காரை ஓட்டி வந்த ராணிப்பேட்டையை சேர்ந்த அஜிமை போலீசார் கைது செய்து காருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது டேவிட்டின் உறவினர்கள் மற்றும் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

போலீசார் டேவிட்டின் உறவினர்களை அப்புறப்படுத்தி மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்தனர். இதனிடையே, கேட்டரிங் பணிகளில் ஈடுபட்டு வந்த தனது மூத்த மகன் டேவிட்டை வெளிநாடுக்கு அனுப்புவதற்கு சிறுகச் சிறுக பணம் சேர்த்து வந்ததாகவும், வேலைக்கு சென்றவுடன் தற்போதுள்ள வாடகை வீட்டில் இருந்து மாறி சொந்த வீடு வாங்கலாம் என்ற கனவோடு டேவிட் இருந்ததாகவும் கூறிய அவரது தாயார், கடைக்கு சென்று விட்டு வருவதாகப் போனவர் சாலையில் கிடப்பதாகக் கூறி கதறியழுதார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments