பிறக்க போறது என்ன குழந்தை..? யூடியூப்பர் இர்பானுக்கு செக் வைத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை..!

0 666

கர்ப்பிணியாக உள்ள தனது மனைவிக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா ? என்பதை துபாய்க்கு சென்று ஸ்கேன் செய்து அறிந்து கொண்டு , அதனை யூடியூப்பில் வெளியிட்டு பகிரங்கப்படுத்திய சாப்பாட்டு விமர்சகர் இர்பானிடம் விசாரணை நடத்த சுகாதாரத்துறை குழு அமைத்துள்ளது

எதையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு.. அந்த உணவு அருமையாக இருப்பதாக பாராட்டி சீராட்டி யூடியூப்பில் வீடியோ போடுவதை வழக்கமாக செய்து வந்தவர் சாப்பாட்டு விமர்சகர் இர்பான்..!

அண்மை காலமாக நெப்போலியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வீடியோ வெளியிடுவது, ஹோம் டூர் செல்வது என்று வீடியோக்களில் வெரைட்டி காண்பித்த இர்பான் , கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியை துபாய்க்கு அழைத்துச்சென்று அவருக்கு பிறக்க போவது என்ன குழந்தை ? என்பதை ஸ்கேன் செய்து அறிந்து கொண்டு வீடியோ வெளியிட்டதால் சிக்கலில் மாட்டியுள்ளார்.

துபாயில் இருந்து திரும்பிய கையோடு, விழா ஏற்பாடு செய்து, தனக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்து, தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறக்கபோவதாக அறிவித்த தோடு, அதனை வீடியோவாகவும் பதிவிட்டு யூடியூப்பிலும் பதிவிட்டிருந்தார் இர்பான். கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று அறிந்து கொள்வது நம் நாட்டில் சட்டப்படி தண்டணைக்குரிய குற்றம் என்ற நிலையில் இர்பான் செய்தது தண்டணைக்குரிய குற்றம் என்று எதிர்ப்புக் குரல் ஒழித்தது.

இந்த விவகாரத்தை தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். பாலினம் குறித்து அறிந்து கொண்டதோடு அதனை பகிரங்கப்படுத்தி வெளியிடப்பட்ட வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில் இர்பானிடம் விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் யூடியூப்பில் உள்ள சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கவும் இர்பானுக்கு சுகாதாரத்துறை கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது. என்ன குழந்தை என்று அறிவித்த பார்ட்டி வீடியோ நீக்கப்பட்ட நிலையில் , ஸ்கேன் செய்த வீடியோ இன்னமும் அப்படியே உள்ளதாக கூறப்படுகின்றது

யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக இர்பான் செய்த காரியம் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments