அக்காவின் திருமண நாளில் தங்கை மரணம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாமியார்? முதலில் நல்லவர் போல் நடித்து, சுயரூபம் காட்டிய மாமியார்

0 944

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அக்காவின் திருமண நாளில் தங்கை மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ மற்றும் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. அக்காவுக்கு வழங்கப்பட்ட வரதட்சணயைப் பார்த்து பொறாமைப்பட்டு, மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திவ்யராஜ் - ஆரோக்கியசெல்வி தம்பதியிக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் பட்டதாரியான ஜெனிபரும் அவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா செங்குடி கிராமத்தைச் சேர்ந்த சவுரிராஜ்-இருதயமேரி தம்பதியினரின் மகனான மார்ட்டின் ராஜும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மார்ட்டின் ராஜ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் பேசியபோது 2வது மகளுக்கு திருமணம் செய்யாமல் 3வது மகள் ஜெனிபருக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறி மார்ட்டின்ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் 9ம்தேதி ஜெனிபரை திருமணம் செய்துள்ளார்.

இரண்டாவது மகள் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றொர் வாக்குறுதி அளித்துள்ளனர். திருமணம் முடிந்து பத்து நாட்கள் மட்டுமே மணப்பெண்ணுடன் குடும்பம் நடத்திய மார்ட்டின்ராஜ், அப்போதே மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜெனிபரின் அக்காவுக்கு கடந்த 19ம்தேதி குடவாசல் அருகே பருத்தியூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், அவரது மாமியார் இருதயமேரி, நாத்தனார் லவன்சியாமேரி ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்த மாமியாரும், நாத்தனாரும் ஜெனிபரிடம் உனக்கு சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று அங்கேயே கடும் சண்டையிட்டு ஜெனிபரை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபர், அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர்; உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என சொல்லி கொடுமைப்படுத்தி தாக்கியதாக தெரிவித்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்வம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், ஜெனிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஜெனிபரின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீர்காழி பொறுப்பு கோட்டாட்சியர் அர்ச்சனா நேரில் ஜெனிபர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். காதல் திருமணம் செய்த 3வது மகள் 2வது மகள் திருமணநாளில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments