ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டிய ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியது.
அண்டை நாடான அஜர்பைஜானில் அந்நாட்டு அதிபருடன் அணைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஈரான் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக, விபத்துப் பகுதிக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியவில்லை. அதனால், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை.
இந்த நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படைக்கு விபத்துப் பகுதியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்தத் துயரமான தருணத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாகவும், அதிபர் உள்ளிட்டவர்கள் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Comments