குற்றாலத்தில் திடீர் வெள்ளம் பதறி ஓடிய சுற்றுலா பயணிகள் சிறுவன் பரிதாப பலி..! கலெக்டர் சொல்வது என்ன ?

0 834

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் திடீரென ஆர்பரித்த வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தான். சுற்றுலா பயணிகள் பதறி ஓடிய நிலையில், அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக மழை பொழிந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் பழைய குற்றாலம் அருவில் ஏராளமான ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். மதியம் 1:30 மணி அளவில் அருவியில் அளவுக்கதிகமான தண்ணீர் கொட்டத் தொடங்கியதால் ஒரு சிலர் வெளியேறினர்.

அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் அருவியின் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டு மக்கள் நிற்கும் இடம் நோக்கி வர குழந்தைகளை தூக்கிக் கொண்டு தாய்மார்கள் அலறியடியே பாதுகாப்பான இடம் தேடி ஓடிவந்தனர்

நீச்சல் தெரிந்த சிலர் ஒருவரையொருவர் கைகொடுத்து காப்பாற்றினர்.

அதற்குள்ளாக காட்டாறு போல கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் வழுக்கி விழுந்த 17 வயது சிறுவன் அஸ்வின் , தண்ணீரோடு அடித்து செல்லப்பட்டான்

சுமார் ஒன்றரை மணி நேரம் ஆர்ப்பரித்த வெள்ளம் வடிய தொடங்கிய பின்னர் சம்பவ இடத்துக்கு காவல்துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித்தலைவரும் வருவாய்த்துறையினரும் வந்து சேர்ந்தனர். தீயணைப்புத்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள்ளாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தீவிரமாக தேடி பாறை இடுக்கில் சிக்கி இருந்த சிறுவனின் உடலை மீட்டனர்

தொடர்ந்து அருவியில் குளிக்க தடைவிதித்து கயிறு கட்டினர் போலீசார். அப்போது அங்கு நின்ற பலியான சிறுவனின் உறவினரை வெளியே போகச்சொல்ல... அவரோ நான் மட்டும் வீட்டுக்கு போயி என்ன பதில் சொல்ல போறேன் ?... என்று தலையில் அடித்து கதறி அழுதார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் , மழை வெள்ளம் குறித்து தாங்கள் முன் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் குளித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மதியம் 1.55 மணி அளவில் வனத்துறை சார்பில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து, அருவிகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும் என குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குற்றாலம் மெயின் அருவியிலும் ஐந்தருவியில் மட்டுமே நீர்வரத்து அதிகமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments