அரசின் அங்கன்வாடி மையத்துக்குள் அந்த நள்ளிரவில் நடந்தது என்ன ? மது பாட்டிலுடன் கும்மாளமிட்டது யார் ? விசாரணைக்கு உத்தரவிட்ட கலெக்டர்

0 655

வேலூர் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் நள்ளிரவில் கும்பலாக மது அருந்துவது போல ரீல்ஸ் எடுத்ததாக திமுக பிரமுகரின் மகன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், தனது மகன் சினிமாவில் நடித்து வருவதாகவும் அதற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தந்தை விளக்கம் அளித்துள்ளார்

ஒயிட் அண்ட் ஒயிட்டில் ... கலர் விளக்குகள் மின்ன... நள்ளிரவில் கையில் சரக்குடன், வாயில் புகையுடன், சமூகத்திற்கு ஏதோ சொல்ல முயலும் இவர் தான் “ரீல்ஸ் ஸ்டார்” சரண் ..!

வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் அருகே வெங்கட்டாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அரசின் அங்கன்வாடி மையத்தை இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மதுக்கூடமாக மாற்றி கூத்தடிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் அங்கு மது குடித்து கூட்டாளிகளுடன் கும்மாளமிடுவது போல வீடியோ எடுத்த சரண் என்ற இளைஞர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

ரீல்ஸ் ஸ்டார் சரணின் தந்தை வேலூர் ஒன்றிய திமுக செயலாளர் ஞானசேகரன். தாய் அமுதா , வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என்றும் கூறப்படுகின்றது. சரண் வீடியோ எடுக்கும்போது நல்ல நிலையில் இருந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை ரெண்டே நாட்களில் மழையால் சேதமடைந்ததாக கூறி அப்புறப்படுத்தப்பட்டதோடு , 4 லட்சம் ரூபாய் செலவில் அதனை மறு சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைத்து தனக்கு சொந்தமான மகிந்திரா XUV 7OO காரை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு ஒன்றும் ரீல் ஸ்டார் சரண் மீது நிலுவையில் உள்ளது

2 வருடங்களுக்கு முன்பு மனஅழுத்தத்தால், தனது மகன் காருக்கு தீவைத்ததாக தெரிவித்த சரணின் தந்தை ஞானசேகரன், தற்போது மனநிலை சீராகி சினிமாவில் நடிப்பதாகவும், அங்கன்வாடி மையத்தில் சினிமா ஷூட்டிங்கிற்காக மது குடிப்பது போல வீடியோ எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்

அதே நேரத்தில் அரசின் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து கும்மாளமிட்டவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments