போலீசுக்கு காத்திராமல்... 15 நாட்கள் அலைந்து திரிந்து திருடர்களை பிடித்த இளைஞர்... போலீஸார் கொடுத்த ஷாக்...!

0 633

சென்னையில் களவு போன ஐ போனை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்த இளைஞர் ஒருவர், தானே களத்தில் இறங்கி 15 நாட்களாக அலைந்து திரிந்து திருடர்களை கண்டுபிடித்தும், அந்த செல்ஃபோன்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை திருடியவரை தேடிக் கண்டுபிடித்தும் அதனை மீட்க முடியாமல் தவித்து வரும் விடுதி மேலாளர் சலீம் இவர் தான்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றின் மேலாளராக வேலைப் பார்த்து வருகிறார் கன்னியாகுமாரியைச் சேர்ந்த சலீம். கடந்த 1 ஆம் தேதி இரவு பணியில் இருந்த சலீம், விடுதியின் வரவேற்பு அறையிலேயே படுத்துத் தூங்கி உள்ளார்.

அதிகாலை 4 மணி அளவில் விடுதி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த நபர் ஒருவர், மேஜையில் வைக்கப்பட்டிருந்த சலீமின் ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் மற்றும் விடுதியின் நிர்வாக செல்போனையும் திருடிச் சென்றார்.

விடுதியில் பொருத்தியிருந்த சி.சி.டி.வியின் பதிவு மூலமாக செல்ஃபோன்கள் திருடு போயிருப்பதை தெரிந்து கொண்டு அந்த பதிவுகளோடு பெரியமேடு காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்றார் சலீம். அங்கிருந்த காவலர் ஒருவர், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பிற்காக அதிகாரிகள் சென்றிருப்பதால் மறுநாள் வருமாறு கூறியதாக தெரிவித்தார் சலீம்.

மறுநாளில் காவல் நிலையம் சென்ற போதும் சலீம் அலைகழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அலுவலக செல்ஃபோன் காணாமல் போனதால் வேலை பறிபோகும் நிலை ஏற்படவே தானே களத்தில் இறங்க முடிவெடுத்தார் சலீம்.

சி.சி.டி.வி பதிவில் பதிவாகியிருந்த முகத்தை தேடி ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் சுமார் 15 நாட்களாக சுற்றி வந்தார் சலீம். ஒருவழியாக தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் படுத்திருந்த பாபுலால் என்ற அந்த நபரை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தார் சலீம். அதில், அல்லா பாட்ஷா என்பவரோடு சேர்ந்து பர்மா பஜாரில் அந்த செல்ஃபோனை 500 ரூபாய்க்கு விற்று மது அருந்தி விட்டதாக தெரிவித்தார் பாபுலால்.

அவரையும் அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வைத்து அல்லா பாட்ஷாவையும் பிடித்தார் சலீம். ஆட்டோவில் இருவரையும் ஏற்றிக் கொண்டு பெரியமேடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார் சலீம்.

அங்கு, போலீஸார் உரிய விசாரணை நடத்தாததால் அதிருப்தியடைந்த சலீம், அந்த இருவரையும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கேயும் போலீஸார் உரிய விசாரணை நடத்தி தனது செல்ஃபோனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார் சலீம்.

செல்ஃபோன் திருடனுடன் ஒரே ஆட்டோவில் 9 மணி நேரமாக சுற்றியும், தன்னை போலீஸார் அலைகழிப்பதாக கருதிய சலீம் தனது நிலை குறித்து ஊடகத்தில் பேட்டியளித்தார்.

பாபுலால், அல்லாபாட்ஷா ஆகியோரை கைது செய்திருப்பதாகவும், திருட்டு செல்போனை வாங்கிய கடைக்காரரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர் போலீஸார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments