சட்டையை கழட்டிருவியா.. சவால் விட்ட வழக்கறிஞர் பதிலுக்கு தாக்கிய போலீசார்..! வாகன சோதனை வாக்குவாதத்தால் வழக்கு

0 727

வந்தவாசி அருகே வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது 2 வழக்குகள் பதிவு செய்த போலீசார், அவரை சாலையில் வைத்து சட்டையை கழற்றி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது

வாகன சோதனை வாக்கு வாதத்தின் போது உதவி காவல் ஆய்வாளரை பார்த்து சட்டையை கழட்டிருவேன் என்று கூறிய வழக்கறிஞரை மடக்கிப்பிடித்து, நடு ரோட்டில் வைத்து சட்டையை கிழித்து போலீசார் அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் தான் இவை..!

கடந்த 11 ந்தேதி மாலை வந்தவாசி தேரடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் ராமு, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கினார். தலைக்கவசம் அணியாமல் வந்த அவர்களிடம் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மற்றொரு பைக்கில் டி.சர்ட் வேட்டி அணிந்தபடி வந்த இளைஞர் தன்னை வழக்கறிஞர் பாலமுருகன் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரே வாகனத்தில் வந்த 3 பேரையும் விடுவிக்க கூறியதாக கூறப்படுகிறது. இதனால் உண்டான வாக்குவாதம் முற்றியதால் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர்.

தொடர்ந்து உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்த பாலமுருகன், “வழக்கறிஞர்ன்னு சொல்கிறேன் என்கிட்டேயே மல்லுகட்டுறீங்க .. சாதாரண ஜனங்கள்ன்னா... என்ன வேனாலும் செய்வீங்க போல” என்று சொல்ல “அப்படிதான் டா செய்வேன் என்ன பண்ணுவ” என்று எஸ்.ஐ ராமு அவரை பிடிப்பதற்கு செல்ல, நண்பர்கள் பாலமுருகனை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயன்றனர்.

இருந்தாலும் விடாமல் எஸ்.ஐ.ராமு அவரை நோக்கிச்சென்றதால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், சட்டையை கழட்டிருவேன் என்றும் ஒண்டிக்கு ஒண்டி வாடா.. என்றும் சவால் விட்டதால் அவரை நண்பர்கள் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். அவர்கள் வந்த இரு சக்கர வாகங்களை எஸ்.ஐ.ராமு கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தை உடன் இருந்த போலீஸ்காரர் செல்போனில் வீடியோ எடுத்தார்

வழக்கறிஞர் பாலமுருகன் தன்னை தாக்கியதாக கூறி ராமு புகார் அளித்ததால் பாலமுருகன் மீது வந்தவாசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவத்தன்று கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலை அருகே இரு சக்கரவாகனத்தில் நண்பருடன் பைக்கில் சென்ற வழக்கறிஞர் பாலமுருகனை மடக்கிப்பிடித்த வந்தவாசி போலீசார் அவரை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து, காலால் எட்டி மிதித்து இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர்

வழக்கறிஞர் பாலமுருகனை கைது செய்ததோடு அவர் தங்களை தாக்கியதாக காவலர் செந்தில்குமார் என்பவரிடம் புகார் பெற்று, பாலமுருகன் மீது வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர். போலீஸ் காரர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியான நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் ராமு, காவலர்கள் எல்லப்பன், ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவத்துக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments