கண்ண மூடுங்க பரிசு தர்றேன் .. காருக்குள் வைத்து காதலியின் கழுத்தை நெரித்த கலாபக்காதலன்..! சடலத்தைக் கடத்திச்சென்று புதைக்க முயற்சி
திருப்பூரில் காதலியை கொலை செய்து சடலத்தை காரில் எடுத்துச்சென்று கொடை ரோடு அருகே புதைக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அட்சயதிருதியை பரிசு தருவதாக கண்ணை மூடச்செய்து கழுத்தை நெரித்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் அருகே கொடை ரோடு சாலையில் அதிகாலையில் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த மாருதி இகோ காரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஆய்வு செய்தனர்.
காருக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் அமர்ந்திருக்க , சாலையோரம் ஒருவர் மண் வெட்டியால் குழி தோண்டிக் கொண்டிருந்தார்.
கார் இருக்கைக்கு இடையில் பெண் ஒருவர் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதை கண்டதும் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்த போலீசார் காருடன் அவர்களை அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர் .
விசாரணையில் அவர்கள் முதுகளத்தூரை சேர்ந்த திவாகர் மற்றும் இந்திரகுமார் என்பது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திவாகருக்கு ஏற்கனவே திருமணமான பிரின்ஸி என்ற பெண்ணுடன் திருமணம் கடந்த காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 2 வருடம் நெருங்கி பழகிய நிலையில் இவர்களின் காதல் விவகாரம் திவாகரின் மனைவிக்கு தெரியவந்ததால் அவர் பிரின்ஸியை விட்டு விலகியுள்ளார்.
காதலித்த போது தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை திரும்பக்கேட்டு பிரின்ஸி தொந்தரவு கொடுத்ததால் அவரை தீர்த்துக்க்ட்ட திட்டமிட்ட திவாகர் முதுகளத்தூரில் இருந்து உறவுக்கார இளைஞர் இந்திரகுமாரை காருடன் வரவழைத்துள்ளார்.
சம்பவத்தன்று அட்சயதிருதியை பரிசு தருவதாக ஆசைவார்த்தைக்கூறி பிரின்ஸியை காரில் அழைத்துச்சென்றுள்ளார் திவாகர்.
புதிதாக சேலை வாங்கி கொடுத்த கையோடு “கண்ணை மூடு பரிசு தர்ரேன்”.. என்று கூறிய திவாகர் , கண்ணை மூடியதும் பிரின்ஸியின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சீட்டுக்கு இடையில் போட்டு மறைத்ததாக கூறப்படுகின்றது.
சடலத்தை புதைக்க திட்டமிட்டு கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் ஒவ்வொரு ஊராக சுற்றி உள்ளனர்.
அதிகாலை வேளையில் கொடை ரோட்டில் , சாலையோரம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டிய போது போலீசாரிடம் மண்வெட்டியும் கையுமாக சிக்கிக் கொண்டது தெரியவந்தது.
திவாகர் , இந்திரக்குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் பிரின்ஸியின் சடலத்தை பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைசெய்யப்பட்ட பிரின்ஸிக்கு , ஸ்டாலின் விஜய் என்ற கணவரும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடதக்கது. திருமணம் கடந்த காதல் என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம் .
Comments