அரசு பேருந்தில் டிக்கெட் பெற்றும் ரூ.1500 அபராதம் தரணுமா ? செக்கர்களை தெறிக்கவிட்ட பெண்..! வச்ச இடம் மறந்து போனா பிரச்சனை தான்

0 831

காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அதனை எங்கே வைத்தோம் என்று பெண் பயணி ஒருவர் மறந்ததால் அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் தேடிய போது டிக்கெட் கிடைத்ததால் அபராதத்தை திரும்பக்கேட்டு பெண் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

காஞ்சிபுரத்திலிருந்து திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைமணி என்பவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் பயணித்தார். உளுந்தூர்பேட்டை வரை செல்ல 3 பேருக்கும் பேருந்தில் பயணச்சீட்டு பெற்ற நிலையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அப்போது கலைமணி டிக்கெட்டை தேடும் போது, அவர் பெற்ற டிக்கெட் கிடைக்காததால் பயணச்சீட்டு இல்லை என கூறி மூவருக்கும் தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்றதும் அவரிடம் இருந்த 500 ரூபாயை செக்கர்கள் அபராதமாக பணம் பெற்றுக் கொண்டதாகவும், அதற்கான ரசீது ஏதும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. கலைமணி மீண்டும் தேடிய போது தனது பையின் ஒரு பகுதியில் இருந்த பயண சீட்டு அவரது கையில் கிடைத்தது. இதையடுத்து, கலைமணி டிக்கெட் பரிசோதகரிடம் பயணச்சீட்டை காண்பித்து தான் கொடுத்த அபராத பணத்தை திரும்ப கேட்டார். ஆனால், டிக்கெட் பரிசோதகர் பணத்தை கொடுக்க மறுக்கவே, வாக்குவாதம் முற்றியது.

“டிக்கெட் எடுக்கவில்லை என்று அபராதம் விதிச்சீங்க... இப்ப டிக்கெட் கிடைச்சிருச்சி.. எங்க பணத்தை கொடுங்க”.. என்று அந்த பெண் ஆவேசமாக சண்டையிட்டார்

பேருந்து நிலையத்தில் யாசகம் பெரும் நபர் உள்ளிட்ட பயணிகள் கலைமணிக்கு ஆதரவாக பேசியதோடு, வீடியோவும் எடுத்ததால் மிரண்டு போன டிக்கெட் பரிசோதகர் அபராதமாக பெற்ற 500 ரூபாயை திருப்பி கொடுத்தார்.

அரசு பேருந்தில் பயணிப்பவர்கள் தங்களது பயணச்சீட்டுக்களை பத்திரப்படுத்தி வைப்பதாக நினைத்து , தங்களது பையில் உடனடியாக எடுக்க இயலாத இடத்தில் வைத்து விட்டு, வைத்த இடத்தை மறந்து போனால் டிக்கெட் பரிசோதகர்களிடம் அபராதமாக பணத்தை இழக்க வேண்டியது வரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments