இல்லறத்துக்கு நள்ளிரவு பூஜை அந்தரத்தில் பறந்த எலுமிச்சை பணத்துடன் மந்திரவாதி ஓட்டம்..! வாழ்க்கையே போச்சிங்க... பெண் ஆவேசம்

0 958

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவனுடன் சேர்ந்து வாழ மாந்த்ரீக பூஜை செய்வதாக கூறி பெண்ணை ஆபாசப்படம் எடுத்த போலி மந்திரவாதி ஒன்றரை லட்சம்  ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்

குழந்தைகள் இல்லையா.. கணவன் மனைவி பிரச்சனையா... கடன் தொல்லையா.. இப்படி சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்வதாக கூறி எலுமிச்சை பழத்தை பறக்க வைத்து, பணம் பறித்த புகாருக்குள்ளாகி இருக்கும் மந்திரவாதி அர்ஜுன் கிருஷ்ணன் இவர் தான்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சத்யா என்ற பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவர், தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் கேரள மாந்திரீகம் என்ற youtube சேனலில் வீடியோ வை பார்த்து, பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

பரிகாரங்கள் செய்தால் பிரிந்து வாழும் கணவனுடன் சேர்த்து வைப்பதாக கூறி முதலில் பத்தாயிரம் ரூபாயும், சிறிது நாட்கள் கழித்து அதிகம் செலவாகும் எனக்கூறி ஒன்றரை லட்சம் ரூபாயும் சத்தியாவிடம் பெற்றுள்ளார் அர்ஜுன் கிருஷ்ணன். கணவனுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ஒன்றை லட்சம் ரூபாயை மந்திரவாதியிடம் சத்யா கொடுத்ததாக கூறப்படுகின்றது.

பணத்தை பெற்றுக் கொண்டு எந்த பூஜைகளையும் செய்யாமல் அலைக்கழித்ததால், பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் சத்யா. தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அழைத்த அர்ஜூன் கிருஷ்ணன், அங்கு வைத்து சத்யாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்ததாகவும், அந்த வீடியோவை தனது youtube சேனலில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட சத்யா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னைப் போன்று 50க்கும் மேற்பட்டோர் இதுபோல சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனால் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும், தனது பணத்தை தராவிட்டால் சாமியாரின் கோயில் முன்பு தீக்குளித்து உயிர் துறப்பேன் எனவும் பாதிக்கப்பட்ட பெண் சத்யா ஆவேசமாக தெரிவித்தார்

பிடிவாதத்தை கைவிட்டு கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி, ஒருவர் தவறை மற்றொருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டாலே இது போன்ற மந்திரவாதிகளை நாடவேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments