அரசு வேலை வேண்டுமா ? ஒரு கோடி ரூபாய் கொடுங்க.. பணத்தை சுருட்டியதால் கொலை..! தோட்டத்தில் கொன்று புதைத்த சம்பவம்
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தேங்காய் வியாபாரியை ஏமாற்றி அழைத்துச்சென்று கொன்று புதைத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ென்னை முகப்பேர் ஜஸ்வந்த் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவரது மனைவி லட்சுமி, தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்த வெங்கடேசன் கடந்த 5 ஆம் தேதி தனது இளைய மகனை நீட் தேர்வு எழுத தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் விட்டு விட்டு , தனது மனைவியுடன் பொள்ளாச்சி சென்றார்.
அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள இயலாததால் தனது தாய் தந்தையை காணவில்லை என வெங்கடேசனின் இரு மகன்களும் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததனர்.
செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது வெங்கடேசனின் செல்போன் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி பகுதியில் இருப்பது தெரியவந்தது.
சிக்னல் அடையாளம் காட்டிய வீட்டில் வெங்கடேசனின் மனைவி லட்சுமியுடன் ஊத்தங்கரையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கணேசனும் கூட்டாளிகளான நித்யானந்தன், விக்னேஷ் ஆகியோரும் இருந்தனர். தன்னையும் , தனது கணவரையும் பணத்துக்காக கடத்தி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாரிடம் லட்சுமி கூறியதால் லட்சுமியை மீட்ட போலீசார், மூவரையும் பிடித்து வெங்கடேசன் எங்கே என்று விசாரித்த போது அவரை ஊத்தங்கரை தோட்டத்தில் அடைத்து வைத்திருப்பதாக கூறினர். அங்கு சென்று பார்த்த போது வெங்கடேசன் இல்லை.
அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
குரூப் 4 அரசு பணி வாங்கித்தருவதாக கூறி தன்னிடம் ஆளுக்கு ஒரு கோடி வீதம் 11 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு போலியான பணி ஆணையை கொடுத்து ஏமாற்றியதால் வெங்கடேசனை, சொத்து வாங்குவது போல நாடகமாடி கடத்தி வந்ததாக தெரிவித்த கணேசன், வெங்கடேசனை கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலை வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கணேசன் , உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்
வெங்கடேசனின் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார் பிணக்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே அரசு பள்ளிக்கூடத்தில் பணியில் இருக்கும் கணேசன், குரூப் 4 அரசு பணியை குறுக்கு வழியில் பெறுவதற்கு பேராசைப்பட்டு பணத்தை இழந்ததோடு, கொலை வழக்கிலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
Comments