கடித்துக் குதறிய ராட்வைலர் நாய்கள்..! உயிருக்குப் போராடும் 5 வயது சிறுமி! 'திக் திக்' நிமிடங்கள்!

0 508

சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பூங்காவில் 2 ராட்வைலர் நாய்கள் கடித்துக் குதறியதில் 5 வயது சிறுமி பின் மண்டைஓடு கழன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி அருகே உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பாளர் ரகு, தமது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் ரக்ஷணாவுடன், பூங்காவுக்குள் உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார். ரகு சொந்த ஊரான விழுப்புரம் சென்றிருந்த நிலையில், சோனியா அறைக்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது பூங்காவில் சிறுமி ரக்ஷனா தனியாக விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது பூங்காவுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் வெங்கடேஸ்வரன் தனது வீட்டில் வளர்க்கப்படும் 2 ராட்வைலர் நாய்களை அழைத்துக் கொண்டு பூங்காவிற்குள் சென்றுள்ளார்.

கழுத்தைச் சுற்றி இழுவைக் கயிறோ, வாய்ப்பூட்டோ இன்றி அவிழத்து விடப்பட்ட அந்த நாய்கள் சிறுமி ரக்ஷணாவைப் பார்த்ததும் பாய்ந்து சென்று கடித்துக் குதறத் துவங்கின. நாய்களின் கூர் பற்கள் குத்திக் கிழித்ததும் அலறித் துடித்துள்ளார், சிறுமி ரக்ஷணா. சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் சோனியா நாயை விரட்ட முற்பட்ட போது, அவரையும் ராட்வைலர்கள் கடிக்கத் துவங்கியதாக தெரிகிறது. இவற்றைப் பார்த்ததும் வெங்கடேஸ்வரன் நாய்களை கட்டுப்படுத்தாமல் அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஓடியுள்ளார்.

ராட்வைலர்கள் இரண்டும் கடித்துக் குதறியதில் சிறுமியின் பின்னந்தலை மண்டை ஓடு கழன்று கொண்டது. உடலின் பல்வேறு இடங்களில் இருந்து ரத்தம் ஒழுகி சிறுமி அலறித் துடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் வசிப்பவர்கள், ரக்ஷணாவையும் சோனியாவையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமியும் அவரது தாயாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூங்காவில் நடந்தது பற்றி வெங்கடேஸ்வரன் வீட்டில் தகவல் சொன்ன பிறகு அவரது தந்தை புகழேந்தி மற்றும் தாய் தனலட்சுமி வெளியே வந்து சிறுமியைக் கடித்துக் குதறிய தங்களது செல்ல நாய்கள் இரண்டையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்று கேட்டை பூட்டிக் கொண்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தனியார் ரத்த வங்கி நடத்தி வரும் புகழேந்தி பல ஆண்டுகளாக ராட்வைலர் நாய்களை வளர்த்து வருவதாகவும், அவற்றை இனப்பெருக்கம் செய்து குட்டிகளை விற்று வருவதாகவும் கூறியுள்ள இப்பகுதி மக்கள், இதற்கு முன் பல முறை சாலையில் செல்வோரை ராய்வைலர்கள் கடிக்கப் பாய்ந்துள்ளதாகவும், இது பற்றி கேட்டால் புகழேந்தி உரிய பதிலளிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் மீது பிறர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நாயின் உரிமையாளர் சிறுமிக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக கூறினார்.

விசாரணைக்குப் பின் புகழேந்தியின் குடும்பத்தினர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர். சிறுமியை கடித்த இரண்டு ராட்வைலர்களையும் 7 நாட்களுக்குள் அவை இருக்கும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்துமாறு புகழேந்தி குடும்பத்தினருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறினால் மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி போன்ற நாட்டு இனங்களைக் காட்டிலும் வெளிநாடுகளில், குறிப்பாக குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த இறக்குமதி செய்யப்படும் நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வரும் நாய்களுக்கு உணவு முறை, தட்பவெப்ப நிலை மாறுவதால் அவற்றின் குணங்களும் மாறுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கண்டிப்பாக உரிமம் வாங்க வேண்டும் என எச்சரித்துள்ள சென்னை மாநகராட்சி, ராட்வைலர் போன்ற நாய் இனங்களை தடையை மீறி இனப்பெருக்கம் செய்து விற்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

ராட்வைலர் போன்றவற்றுக்கு ஒரு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,இந்தியாவிலும் கடந்த 2024 மார்ச்சில் ராட்வைலர், புல்டாக், பிட்புல் போன்ற 23 நாய்களை இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம் நீதிமன்றத்தில் முறையிட்டதால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments