பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்துக் குதறிய ராட்வைலர் நாய்கள்..! நாய் உரிமையாளரின் அலட்சியம்!!

0 814

சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்துக் குதறிய 5 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக இருப்பவர் ரகு. இவர் அங்குள்ள அறை ஒன்றில் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக்ஷாவுடன் தங்கி இருந்து பூங்கா காவல் பணிகளை செய்து வருகின்றார்.

உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்காக விழுப்புரம் சென்றிருந்த நிலையில் பூங்காவில் சோனியாவும் 5 வயது மகள் சுரக்ஷாவும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது அருகாமையில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தமது மனைவி, மகனுடன் தான் வளர்க்கும் 2 ராடவைலர் நாய்களை அழைத்துக் கொண்டு பூங்காவிற்குச் சென்றதாக தெரிகிறது.

பூங்காவில் விளையாடி கொண்டிருந்த காவலாளியின் மகள் சுரக்ஷாவை 2 நாய்களும் துரத்திச் சென்று கடித்து குதறின. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா வெறி பிடித்த இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை போராடி மீட்டு உள்ளார்.

அப்போது சோனியாவையும் இரண்டு நாய்களும் கடித்துள்ளன. இதை பார்த்த நாயின் உரிமையாளர்கள் 3 பேரும் நாயை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

2 நாய்களும் சிறுமியின் தலையை கடித்து உரித்து இழுத்ததால் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நாயின் உரிமையாளர் புகழேந்தியை விசாரணைக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நாயின் உரிமையாளர் சிறுமிக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக கூறி உள்ளார்.

உடனடியாக இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து சிறுமியை ஆயிரம் விளக்கு அப்போலோ குழந்தைகள் மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாய்களின் உரிமையாளரான புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

புகழேந்தி பூங்காவிற்கு நாயை அழைத்துச் சென்ற போது 2 நாய்களையும் கயிறு கட்டி அழைத்து வரவில்லை என்றும், நாயின் வாய் பகுதிக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாமல் அழைத்து சென்றதாகவும் கூறிய சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பூங்கா உள்ளே வந்ததும் விளையாடி கொண்டிருந்த குழந்தையை கண்டதும் 2 நாய்களும் வெறி பிடித்தது போல கடித்து குதறியதாக தெரிவித்தனர். ஒரு நாய் தலையையும், மற்றொரு நாய் கையையும் கவ்விப்பிடித்து இழுத்ததாகவும் புகழேந்தி அந்த சிறுமியை காப்பாற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

புகழேந்தி 2 ராட்வைலர் நாய்களையும் வளர்த்து அதன் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார் எனவும், ஏற்கனவே 2 நாய்களும் அந்த பகுதியில் உள்ள சிலரை இரண்டு முறை கடித்துள்ளதாகவும் வீட்டருகில் குடியிருப்போர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments