கை கால்கள் கட்டப்பட்டு கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட காங். மாவட்டத் தலைவர்..! சிக்கிய 'மரண வாக்குமூலம்'..!!

0 859

 இரண்டு நாட்களாக காணவில்லை என தேடப்பட்டு வந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார் தனசிங். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அவரை 2 நாட்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜெஃப்ரின் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அதே கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கம்பியால் கால்கள் கட்டப்பட்டு எரிந்து நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு தடயவியல் துறையினரும், புலனாய்வுப் பிரிவினர் மோப்ப நாய்களுடனும் வந்து விசாரணை நடத்தினர்.

உடல் கிடந்த இடத்துக்கு சுமார் 5 மீட்டர் தூரத்தில் ஜெயக்குமார் தனசிங்கின் ஆதார் அட்டை, லைசன்ஸ், விசிட்டிங் கார்டு போன்றவற்றை போலீசார் மீட்டனர்.

ஜெயக்குமார் தனசிங் எப்போதும் தனது கையில் வைத்திருந்த செல்ஃபோனை காணவில்லை எனக்கூறிய போலீசார், அதை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் ஜெயக்குமார் தன்சிங் 2 தினங்களுக்கு முன் எழுதியதாகக் கூறப்படும் 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தினர் ஒப்படைத்தனர்.

ஜெயகுமார் தனசிங்கின் லெட்டர் பேடில் நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட அக்கடிதத்தில், தனக்கு தரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கேட்டதால் சிலர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோரின் பெயர்களும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயக்குமார் தனசிங்கின் கடிதம் பற்றி கேட்ட போது, தனக்கும், அவருக்கும் நல்ல நட்புறவு இருந்ததாகவும், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் எதுவும் இருந்ததில்லை என்றும் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் கூறினார்.

சென்னையில் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பாக கட்சி ரீதியாகவும் விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

கால்கள் கட்டப்பட்டிருந்ததால் ஜெயக்குமார் தனசிங்கை யாராவது கடத்தி சென்று படுகொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments