மாமூல் பணம் கொடுக்காத கலெக்டரின் தந்தைக்கு பளார்..! 2 லட்சம் கேட்டு அடாவடி
சென்னை மடிப்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி வரும் ஆந்திராவை சேர்ந்த முதியவரிடம், இரண்டு பேர் திமுக கவுன்சிலர் பெயரை சொல்லி 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி தாக்கியதாக மடிப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11ஆவது பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருபவர் ஆந்திராவை சேர்ந்த 74 வயதான மண்ணு ரமணய்யா. 14 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை, கடந்த 2020ம் ஆண்டில் இருந்து முறையான அனுமதி பெற்று கட்டி வருகிறார்.
அந்த குடியிருப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், 188வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் அனுப்பியதாக கூறி சென்ற இருவர் கட்டிடம் வெளியே வந்துள்ளது எனக்கூறி 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இருமுறை மிரட்டிச் சென்ற நபர்கள் இன்று வந்து பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டிய நிலையில், தான் முறைப்படி மாநகராட்சியின் அனுமதி பெற்று கட்டி இருப்பதாக கூறிய முதியவரை கண்ணத்தில் தாக்கியதாக கூறப்படுகின்றது.
தான் என்ன தப்பு செய்தேன் எதற்காக அடித்தீர்கள் ... பணம் கொடுக்கவில்லை என்றால் அடிப்பீர்களா ?என்று கேட்டு வாக்குவாதம் செய்தார் அந்த முதியவர்...
ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர் , தாக்கப்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக கவுன்சிலர்களின் ஆதரவாளரான விமல் உள்ளிட்ட 3 பேர் மீது முதியவர் புகாரளித்தார்.
சிங்கம் படத்தில் வரும் வில்லன் மயில்வாகனம் போல வீடுகட்டும் நபர்களை குறிவைத்து பணம் கேட்டு பகிரங்கமாக மிரட்டியதாக எழுந்துள்ள புகார் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான முதியவரின் மகன் ஆந்திராவில் மாவட்ட ஆட்சியராக உள்ளதால் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments