இரயிலிலிருந்து தவறி விழுந்து பலியான கர்ப்பிணி வளைகாப்புக்காகச் சென்றபோது சோகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். அபாயச் சங்கிலியை இழுத்தும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் ரயில் நிற்காமல் சென்றதாக உறவினர்கள் கதறி அழுதனர்.
வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சங்கரன்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற கஸ்தூரி என்ற பெண் கர்ப்பமாக இருந்ததால் அடிக்கடி வாந்தி எடுத்தவாறே சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த பூவனூர் அருகே சென்றபோது வாந்தி எடுப்பதற்காக வாஷ் பேசின் அருகே சென்ற கஸ்தூரி, எதிர்பாராதவிதமாகத் தடுமாறி படிக்கட்டு வழியே கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அந்தப் பெட்டியிலிருந்த அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நிற்கவில்லை என்று கூறப்படும் நிலையில், அடுத்த பெட்டிக்கு ஓடிச் சென்று சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் ரயில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ரயிலை விட்டு இறங்கி நீண்ட நேரம் தேடியும் இருட்டாக இருந்ததால் கஸ்தூரியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து ரயில் விருத்தாசலம் புறப்பட்டுச் சென்றது. தகவல் அறிந்ததும் உடனடியாகத் தேடும் பணியில் இறங்கிய ரயில்வே போலீசார் சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பிறகு உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ மாம்பாக்கத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியின் உடலை கைப்பற்றினர். வரும் ஞாயிற்றுக்கிழமை கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறிய உறவினர்கள், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் ரயில் நின்றிருந்தால் தங்களது மகளைக் காப்பாற்றி இருக்கலாம் என கதறி அழுதனர்.
இதனிடையே விரைவு ரயிலில் அபாயச் சங்கிலி செயல்படவில்லை என்ற புகார் குறித்து விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கொல்லம் ரயிலில் உள்ள அபாயச் சங்கிலியை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments