கண்ணை மறைத்தக் காதல் குடும்பத்தையே பலி கொடுக்கத் துணிந்த இளைஞர் சிக்கன் ரைசில் கலந்த விஷத்துக்கு பலியான உயிர்
நாமக்கலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த நிலையில், காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொல்ல முயன்ற கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் கடந்த 30-ந் தேதி கொசவம்பட்டியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பார்சல்கள் வாங்கிச் சென்றார்
சிக்கன் ரைஸ் பார்சலை தனது தாயார் நதியாவிற்கு கொடுத்துவிட்டு தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் வீட்டிற்கு சென்ற பகவதி, அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். சிக்கன் ரைசை முதலில் சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மற்றவர்கள் அதனை சாப்பிடாமல் தவிர்த்து விட்டனர்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து , சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து இருப்பது உறுதியானது.
இதனையடுத்து பகவதியிடம் போலீசார் விசாரித்தபோது, அவரது கொலைத்திட்டம் தெரிய வந்தது. தனது கல்லூரியில் உடன் பயிலும் மாணவி ஒருவரை காதலித்ததாகவும் அதுமட்டுமின்றி, திருமண பெண் ஒருவருடனும் தொடர்பு இருந்ததாகவும் இந்த விவகாரம் தனது தாய் நதியா மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் தொடர்ந்து கண்டித்து வந்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலத்தில் பகவதி தெரிவித்ததாக கூறப்படுகிறது
தாய் நதியா மற்றும் குடும்பத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதால் அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், தான் பணிபுரியும் இண்டர்நெட் சென்டரில் ஒரு மாதம் ஊதியம் வாங்கியதற்காக டிரீட் வைப்பதாக கூறி சிக்கன் ரைஸ் வாங்கி அதில் பூச்சி கொல்லி மருந்து கலந்ததாகவும் போலீசாரிடம் பகவதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
Comments