எங்களுக்கே ஹாரன் அடிப்பியா..? தொழிலதிபரின் சட்டையைக் கிழித்து துரத்தித் துரத்தித் தாக்கிய கும்பல்! அதுவும் போலீசாரின் கண் முன்னால்!!

0 773

நட்ட நடுசாலையில் போக்குவரத்து போலீசாரின் கண் முன்னால் தொழிலதிபர் ஒருவரை சட்டையைக் கிழித்து சரமாரியாக தாக்கிய முன்னாள் ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது நண்பர்களை, பொதுமக்கள் சேர்ந்து விரட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

டபிள்யூ.டபிள்யூ.இ.யில் வருவதைப் போல, தனி நபர் ஒருவரை 2 பேர் வளைத்து வளைத்து தாக்கும் சம்பவம் அரங்கேறிய இடம், சென்னை பட்டினப்பாக்கம்.

தாக்குதலுக்கு ஆளானவர், ராயபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிமாறன். தோழி ஒருவருடன் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு முன்னால் ஸ்விஃப்ட் கார் ஒன்று அல்லாடிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

வழிவிடுமாறு மணிமாறன் ஹாரன் ஒலி எழுப்பிய போது, நடு சாலையில் ஸ்விஃப்ட் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி வந்த ஒருவர், ஹாரன் அடிக்காமல் போக முடியாதா எனக் கேட்டு மணிமாறனை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

ஸ்விஃப்ட் காரில் இருந்து மேலும் 2 பேரும் இறங்கி வந்து தம்மை அடித்து சட்டையை கிழித்ததாக மணிமாறன் தெரிவித்தார்.

சாலையில் போக்குவரத்து போலீசார் முன் அரை நிர்வாணமாக நின்ற மணிமாறனை ஸ்விஃப்ட் கார் கும்பல் விடாமல் துரத்தித் தாக்கியது.

போக்குவரத்து போலீசார் தடுக்க முயன்ற போது, ஸ்விஃப்ட் கார் கும்பலில் ஒருவர் தமது சட்டைப் பையில் இருந்து அடையாள அட்டையை எடுத்துக் காட்டி, தாமும் போலீஸ் என்று கூறிவிட்டு, அடி தாங்காமல் ஓடிய மணிமாறனை விரட்டிச் சென்று தாக்குதலை தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் மணிமாறனை கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்து சரமாரியாக குத்தத் துவங்கினர்.

அப்போது இவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், போக்குவரத்து போலீஸ்காரிடம், தடுங்க சார் போய்.. என்று கூறிவிட்டு, மணிமாறனை தாக்கியவர்களை தானே சென்று தடுத்து விலக்கி விட்டார்.

இப்பகுதி மக்கள் சிலரும் திரண்டு தங்கள் செல்ஃபோனில் படம் எடுக்க ஆரம்பித்ததால் ஸ்விஃப்ட் கார் கும்பல் தாக்குதலை கைவிட்டு புறப்பட்டுச் சென்றது.

தாக்குதல் பற்றி மணிமாறன் அளித்த புகார் குறித்து விசாரித்த போலீசார், தாமும் போலீஸ் தான் என்று கூறியவர் ஆயுதப்படை தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற லோகபிரகாஷ் எனக் கண்டறிந்து, அவர் மீதும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments