பிரபு தேவா மாஸ்டருக்காக 3 மணி நேர காத்திருப்பு..! மயங்கி விழுந்த டான்சர்கள்!! கொந்தளித்த பெற்றோர்கள்!

0 637

பிரபு தேவா முன்னிலையில் நடப்பதாக இருந்த சாதனை நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொளுத்தும் சென்னை வெயிலில் கருப்பு உடை அணிந்து 3 மணி நேரம் நின்றிருந்த சுமார் ஆயிரம் பேர், கடைசி வரை பிரபு தேவா வராததால் நிகழச்சி ஏற்பாட்டாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு 1000 பேர் 100 நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார், சினிமா நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர்.

இதற்கான நுழைவுத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி தமிழ் நாட்டின் பல ஊர்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்ததாக தெரிகிறது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைனதானத்தில் வியாழன் காலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டதன் பேரில் பதிவு செய்தவர்கள் 5 மணிக்கே வரத் தொடங்கினர். கருப்பு உடையில் வந்திருந்தவர்களுக்கு பிரபு தேவாவின் டிரேட் மார்க் தொப்பிகள் வழங்கப்பட்டிருந்தன.

சொன்னபடி 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்காத நிலையில், அது பற்றி கேட்ட போது, பிரபு தேவா மாஸ்டர் வந்து கொண்டிருக்கிறார்.. எழும்பூர் வரும் வழியில் இருக்கிறார்.. இன்னும் சில நிமிடங்கள் வந்து விடுவார்.. என்று சொல்லிச் சொல்லியே 9 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இழுத்தடித்ததாக பங்கேற்க வந்தவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க சிறு பிள்ளைகளுடன் 3 மணி நேரம் வெயிலில் காத்திருந்த பெற்றோர், பிரபு தேவா எப்போது வேண்டுமானாலும் வரட்டும்.. முதலில் நிகழ்ச்சியை தொடங்குங்கள் என்று கூறி ஏற்பாட்டாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

9 மணி வாக்கில் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், உடல் நலக் குறைவால் பிரபு தேவா நேரில் வரமாட்டார் என ராபர்ட் மாஸ்டர் அறிவித்தார்.

இதனால் கோபமடைந்தவர்களை சமாளிப்பதற்காக பிரபு தேவாவை ஆன்லைன் கால் மூலம் திரையில் தோன்றச் செய்தனர்.

பிரபு தேவா தாங்கள் ஆடுவதைப் பார்க்கிறார் என்ற ஆறுதலுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நடனமாட தொடங்கிய நிலையில், கடும் வெயிலால் பலர் சோர்வடைந்து நிழல் தேடிச் சென்றனர். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடைசியில் உலக சாதனை முயற்சி கைவிடப்படுவதாக அறிவித்த ராபர்ட் மாஸ்டர், வேறொரு நாளில் உட்புற அரங்கு ஒன்றில் பிரபு தேவா முன்னிலையில் மீண்டும் இதே நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து மன்னிப்பு கேட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments