கல்வீச்சு.. கடைகளுக்கு தீ வைப்பு..! இழுத்துப் பூட்டப்பட்ட கோயில்! போர்க்களமாக மாறிய தீவட்டிப்பட்டி!
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் வழிபாட்டு உரிமை தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதலின் போது, வன்முறைக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தீவட்டிப்பட்டி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது, பெரிய மாரியம்மன் கோயில். இங்கு வழிபாட்டு உரிமை தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
சித்திரைத் திருவிழா துவங்கியதை அடுத்து, மீண்டும் பிரச்சினை எழுந்ததால் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், ஏற்கனவே உள்ள நடைமுறையை தொடருமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கோயிலுக்கு புதனன்று சென்ற ஒரு தரப்பினர் தங்கள் படையலை அம்மன் முன் வைக்குமாறு வலியுறுத்தியதாகவும் இதற்கு மற்றொரு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு போலீசார் கோயிலை இழுத்துபூட்டினர்.
இதையடுத்து ஒரு சிலர் சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் திரண்டு அங்கு நின்றிருந்த எதிர் தரப்பினர் மீது கற்களை வீசினர். பதிலுக்கு அவர்களும் கற்களை வீசியதால் சம்பவ இடமே போர்க்களம் போல மாறியது.
அப்போது ஒரு சிலர் தள்ளு வண்டிகளை குறுக்கே போட்டு வாகனப் போக்குவரத்தை மறித்தனர். இதனால் நெடுஞ்சாலையின் இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசை கட்டி நிற்கும் அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கு நடுவே சிலர் நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள சாலைகளில் இருந்து கடைகளை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்தோடச் செய்தனர்.
சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீராக்கினர். கட்டிடங்களுக்கு தீ வைத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments