தவணை கட்டாத கணவன்... பிணைக் கைதியான மனைவி... இவ்வளவும் ரூ.770-க்காகத் தான்...
சேலத்தில், மனைவியின் படிப்பு செலவிற்காக கணவன் வாங்கிய கடனில் 770 ரூபாய் வார தவணை கட்டாததால் இளம்பெண்ணை வங்கிக்கு அழைத்துச் சென்று பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கணவன் கட்டாத தவணைக்காக கல்லூரியில் படிக்கும் மனைவியை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு பஞ்சாயத்து பேசப்பட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள IDFC வங்கி தான் இது...
துக்கியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் வேலை பார்த்து வரும் பிரசாந்த். குடும்ப செலவிற்காகவும் கல்லூரியில் படித்து வரும் மனைவி கௌரிசங்கரியின்படிப்பு செலவிற்காகவும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு IDFC வங்கியில் 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார் பிரசாந்த்.
வாரம் 770 ரூபாய் வீதம் 52 தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்துவதாகக் கூறி கடன் பெற்றிருந்த பிரசாந்த், 42 தவணைகளை செலுத்தியதாக கூறப்படுகிறது.
43-வது தவணைக்கான கடைசி தேதி முடிந்ததால் பிரசாந்த்தை செல்ஃபோனில் தொடர்புக் கொண்டுள்ளார் வங்கி ஊழியர் சுபா.
ஆனாலும், பிரசாந்த்தை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது வீட்டிற்கே நேரடியாகச் சென்றுள்ளார் வங்கி ஊழியர் சுபா. பிரசாந்த் அங்கு இல்லாதால் வீட்டில் இருந்த கௌரிசங்கரியை தன்னுடன் வருமாறும், தவணை தொகை செலுத்தி விட்டு உனது கணவர் அழைத்து செல்லட்டும் என்று கூறி அவரை மதிய நேரத்தில் சுபா அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
வங்கிக்கு சென்ற பின்பு தனது கணவர் பிரசாந்தை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு நடந்த விபரங்களை தெரிவித்தார் கௌரி சங்கரி.
இதுகுறித்து வாழப்பாடி சரக டி.எஸ்.பி ஆனந்த்திடம் புகார் தெரிவித்த பிரசாந்த், இரவு 7.30 மணியளவில் வங்கிக்குச் சென்று போலீசார் முன்னிலையில் வார தவணை 770 ரூபாயை செலுத்தி தனது மனைவியை மீட்டார்.
இரவு வரையில் வங்கி செயல்பட்டுக் கொண்டிருந்ததால், இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேள்வி எழுப்பிய போலீஸார், மறுநாள் காலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிச் சென்றனர். இளம்பெண் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்த ஐ.டி.எஃப்.சி வங்கி மேலாளர், மாத கடைசி என்பதால் அலுவலகம் மட்டுமே இரவில் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
வங்கி, நிதி நிறுவனங்கள் மாலை 6 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யகூடாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மீறப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments