உங்க பெண்ண கைது செஞ்சிருக்கோம் கேட்கிற பணத்தை கொடுக்கலன்னா.. போலீஸ் பெயரில் பகிரங்க மிரட்டல்...! நடுங்கிப்போன தொழில் அதிபர் புகார்
சென்னையில் தொழில் அதிபரின் மகளை மோசடி வழக்கில் கைது செய்து வைத்திருப்பதாக கூறி வாட்ஸ் அப் காலில் மிரட்டி, பதற்றத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர் ஒருவர் பேசி உள்ளார். 3 பேருடன் சேர்ந்து ஒருவரை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் உங்கள் மகளை கைது செய்துள்ளோம், அவங்க கிட்ட பேசுங்க என்று கூற, அதில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று அவர் சுதாரிப்பதற்குள், உடனடியாக தான் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பவில்லை என்றால். உங்கள் மகளின் புகைப்படத்தை மீடியாவுக்கு கொடுத்து அசிங்கப்படுத்தி விடுவோம், அவளுடைய எதிர்காலமே கேள்வி குறியாகி விடும் என்று இடைவிடாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மிரட்டலால் பதறிப்போன அந்த தொழில் அதிபர், சற்று நிதானித்து, சுதாரித்துக் கொண்டு அந்த இணைப்பை துண்டித்து விட்டு, தனது மகளின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய போது அவரது மகள் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெளி நாட்டு எண்ணில் இருந்து வந்த வாட்ஸ் அப் அழைப்பு குறித்து தொழில் அதிபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதே போல வடபழனியை சேர்ந்த சூர்யா என்பவரிடம் அமலாக்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் வங்கி கணக்கில் கணக்கில் வராத பணம் ஏராளமாக உள்ளது, அவற்றை முடக்க இருக்கிறோம் என்று மிரட்டி உள்ளனர். பதறிப் போய் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளதாக சூர்யா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதே போன்று 4 சம்பவங்கள் சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது
இது போன்ற அறிமுகம் இல்லா நபர்களின் மிரட்டலுக்கு அஞ்ச தேவையில்லை என்று கூறியுள்ள தமிழக சைபர் கிரைம் போலீசார், இதுபோன்ற மோசடி அழைப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அல்லது புகார் அளிக்க 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
Comments