செல்போனுக்கு ரூ16000 கடன் ரூ75000 கட்ட சொல்லி மிரட்டி வசமாக சிக்கிய பஜாஜ் பைனான்ஸ் ..! சுயேட்சை எம்.எல்.ஏவின் தரமான சம்பவம்

0 581

புதுச்சேரி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில்16 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று செல்போன் வாங்கிய பெண் 19 ஆயிரம் ரூபாய்யை திருப்பி செலுத்திய நிலையில், வட்டியாக 75 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று சென்னை போலீஸ் பெயரில் மிரட்டிய வங்கி பெண் ஊழியரை கண்டித்து சுயேட்சை எம்.எல்.ஏ நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

புதுச்சேரியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் 16 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று ஸ்மார்ட் போன் வாங்கிய ஹேமலதா என்பவர் 19 அயிரம் ரூபாய் கட்டிய நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக சில தவணைகளை கட்டத் தவறியுள்ளார். வட்டியுடன் சேர்த்து முதலில் 35 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறிய பஜாஜ் நிறுவன ஊழியர் அபராத வட்டி எனக்கூறி மேலும் ரூ. 75 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

சில தினங்கள் கழித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில், இருந்து சப்- இனஸ்பெக்டர் தமிழ்செல்வி பேசுவதாக, கூறி ஹேமலாதவிடம், பேசிய பெண், உடனடியாக கடனை அடைக்காவிட்டால், புழல் ஜெயிலில் அடைப்பேன் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது. இது குறித்து அந்தப்பெண் சுயேட்சை எம்.எல்.ஏ நேருவிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதையடுத்து எம்.எல்.ஏ. நேரு, சென்னை போலீஸ் என்று பேசிய எண்ணை தொடர்பு கொண்டபோது, இது சிவில் வழக்கு கடனை வட்டியுடன் கட்டவில்லை எனறால் கம்பி எண்ண வேண்டும் என்று பெண் குரல் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து நேரு தனக்கு தெரிந்த போலீசாரிடம் விசாரித்த போது சென்னை போலீஸ் யாரும் அப்படி பேசவில்லை என்றும் நிதி நிறுவன பெண் ஊழியரே போலீஸ் போல மோசடியாக பேசி மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பெண் ஊழியர் மீது சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்த எம்.எல்.ஏ நேரு தனது ஆதரவாளர்களுடன் நிறுவனத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்

நிறுவனத்தில் இருந்து யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், பொறுமை இழந்த போராட்டகாரர்கள் , வாசலில் இருந்த காவலாளியை தள்ளிக்கொண்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து நியாயம் கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தினர். பஜாஜ் நிறுவனம் இந்த விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்வதாக கூறியதோடு தங்கள் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வட்டியை குறைத்து கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்ட காரர்கள் கலைந்து சென்றனர்

அதே நேரத்தில் தங்களிடம் வாங்கிய 16 ஆயிரம் ரூபாய் கடனுக்கு முறையாக தவணை தொகையை செலுத்தாமல் விட்டதால் வட்டியுடன் சேர்த்து 75 ஆயிரம் ரூபாயாக கடன் உயர்ந்து விட்டதாகவும் மோசடியாக எந்த பணமும் தாங்கள் கேட்கவில்லை என்றும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments