ஊரைவிட்டு தள்ளி வைத்த பால்கட்டளை நாட்டாமைகள் கும்பிட்டு விழ வைத்து அபராதம்..! கலெக்டரிடம் புகார் தெரிவித்த குடும்பம்

0 514

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பால்கட்டளை கிராமத்தில் ஊர் பேச்சை கேட்காததால் விவசாயியின் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்த நிலையில், அவருடன் பேசிய சகோதரரை ஊரார் முன்பு கும்பிட்டு விழவைத்து அபராதம் விதித்ததாக புகார் எழுந்துள்ளது 


நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பால் கட்டளை வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி நாராயணன். கடந்த ஆறு மாதமாக தனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி நாராயணன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு ஒன்றை அளித்தார்

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் கோயில் நிலத்தை குத்தகைக்கு பெற்று பயிர் செய்து வரும் நிலையில் அந்த நிலத்தை ஊருக்கு தரும்படி கேட்டு தான் கொடுக்க மறுத்ததால் தனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர் நாட்டாமை இளையராஜா உத்தரவிட்டதாக தெரிவித்தார் நாராயணன் .

மேலும் தன்னிடம் பேசினால் அவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கும்படியும் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும் கூறியதால் தன்னிடம் பேசிய 3 பேர் குடும்பத்தையும் தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் தங்களிடம் யாரும் பேசுவதில்லை என்றும் விவசாய வேலைக்குக்கூட ஆட்கள் வருவதில்லை என்றார் நாராயணன்.

தன்னிடம் பேசியதால் சகோதரரை ஊரார் முன்பு கும்பிட்டு விழ வைத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரே ஊருக்குள் சேர்த்துக் கொண்டதாக கூறி வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்

தங்கள் குழந்தைகளிடம் கூட யாரையும் பேச விடுவதில்லை என்று பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்

இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறையினர், பிரச்சனைக்குரிய அந்த இடத்தை முதலில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஊருக்காக வாங்க முடிவு செய்ததாகவும், நாராயணன் முதல் ஆளாக முந்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிலத்தை குத்தகைக்கு வாங்கியதால் ஆத்திரமடைந்த ஊர் நிர்வாகிகள் நாராயணனை எந்த நிகழ்விலும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் மற்றபடி கடையில் பொருட்கள் வாங்கவோ, தண்ணீர் பிடிக்கவோ ஊர் தலைவர்கள் தடை விதிக்கவில்லை என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments