சும்மா சும்மா வீட்டுக்குள்ள வராண்டா.. மிலிட்டரி மனைவியின் அச்சம் நிஜமானது நெருங்கிப்பழகி கழுத்தை அறுத்த கொடூரம்..! இரட்டை கொலை வழக்கில் போலீஸ் சாமர்த்தியம்

0 941

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து முன்னாள் ராணுவ அதிகாரியையும் அவரது மனைவியையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 20 வயது ராஜஸ்தான் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை அடுத்த ஆவடி டாங்க் பேக்டரியில் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் சிவநாயர்.

முத்தாபுதுப்பேட்டையில் சொந்தமாக வீடு கட்டு மனைவி பிரசன்னகுமாரி, மகன் ஹரிஓம்ஸ்ரீயுடன் வசித்து வந்தார்.

75 வயதான சிவநாயர் சித்தமருத்துவமும் பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மதிய வேளையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் மனைவி பிரசன்ன குமாரியையும், சிவ நாயரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினான்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த ஆவடி காவல் உதவி ஆணையர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து  அதே பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலைப்பார்த்த மகேஷ் என்ற 20 வயது ராஜஸ்தான் இளைஞனை ரத்தக்கறை படிந்த ஆடையுடன் கைது செய்தனர்.

வளசரவாக்கத்தில் வட மாநில நண்பர்களுடன் தங்கி உள்ள மகேஷ் கடந்த சில ஆண்டுகளாக தனது உடல் வலிக்கு சிவநாயரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளான். சின்னபையனாக இருந்ததால் பிரசன்ன குமாரியும் மகன் போல பழகி உள்ளார்.

இதன் மூலம் அவர்கள் வீட்டில் ஏராளமாய் நகைகள் இருப்பது மகேஷுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த நகைகளை கொள்ளையடிக்க கடந்த ஒரு மாதமாக திட்டமிட்ட மகேஷ், அவர்களது மகன் எந்த நேரத்தில் வீட்டில் இருக்கிறார், வெளியே செல்கிறார் என்பதை நோட்டமிட்டுள்ளான்.

25 நாட்களுக்கு முன்பு வீட்டிற்குள் சென்ற மகேஷின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக பிரசன்னகுமாரி தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டுக்கு சென்றபோது அவர்களது மகன் ஹரி ஓம் ஸ்ரீ வீட்டுக்குள் இருந்ததால் திரும்பி வந்து அவர் வீட்டில் இருந்து புறப்படும் வரை வெளியே காத்திருந்துள்ளான்.

அவர் வெளியே புறப்பட்டதும் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த மகேஷை பிரசன்னகுமாரி தடுத்து நிறுத்தி உள்ளார்.

முதலில் அவரை கொலை செய்து விட்டு கண் ஆபரேசன் செய்து விட்டு அமர்ந்திருந்த சிவ நாயரையும் கொலை செய்துள்ளான்.

பீரோவை தேடி செல்வதற்குள்ளாக வெளியே அவர்களது மகன் இரு சக்கரத்தில் வரும் சத்தம் கேட்டதும் சுவர் ஏறிக்குதித்து தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட போது அவனது கைகளில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார், ஹரி ஓம் ஸ்ரீ வந்து விட்டதால் வீட்டில் இருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை போகாமல் தப்பியதாகவும் தெரிவித்தனர்.

அறிமுகம் இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமான நபர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதை தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் எப்போதும் முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டி வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments