100 ஏக்கர் நிலத்தை பிரித்துத் தரக்கேட்டு தாக்கியதாக கைதான மகன் வாக்குமூலம்..! பெண் அதிகாரியை ஆலைக்குள் சிறைவைத்தவர்

0 947

100 ஏக்கர் சொத்துக்காக தந்தை மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியானதால் 2 மாதம் கழித்து மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை மறைத்த உதவி காவல் ஆய்வாளர் பழனிச்சாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மார்டன் அரிசி ஆலையுடன் கூடிய பங்களா வீட்டில் வசித்து வந்தவர் குழந்தைவேலு. சேலம் ஆத்தூர் அருகே 100 ஏக்கர் நிலமும், சேகோ பேக்டரி என்றழைக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலையும் இவருக்கு சொந்தமாக உள்ளது.

குழந்தைவேலுவுக்கு சங்கவி என்ற மகளும் சக்திவேலு என்கிற மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமான நிலையில் சக்திவேலு சேகோ பேக்டரியை கவனித்து வந்துள்ளார். வீட்டின் வரவு செலவுகள் அனைத்தும் குழந்தைவேலுவின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதனால் தேவைக்கு பணம் எடுக்க இயலாமல் மன உளைச்சலில் இருந்த சக்திவேலு தான் தனியாக தொழில் செய்ய விரும்புவதால் சொத்துக்களை பிரித்து தரக்கேட்டுள்ளார். இதற்கு குழந்தைவேலு சம்மதிக்காததால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே பிப்ரவரி 16ஆம் தேதி தந்தை குழந்தை வேலுவை கடுமையாக தாக்கி உள்ளார் மகன் சக்திவேலு.

அவரை மீட்டு காரில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதும் தாக்கியதாக கூறப்படுகின்றது.

வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொடுத்து குழந்தைவேலுவின் மனைவி ஹேமா கைகளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னையும் பேரன் சக்திவேல் தாக்க வருவதாக குழந்தைவேலுவின் தந்தை அத்தியப்பனும் ஒரு புகார் அளித்துள்ளார். புகார்களை விசாரித்த டி.எஸ்.பி தனசேகரன், காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பிய குழந்தை வேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த தாக்குதல் சம்பவத்தை தந்தை மகன் விவகாரம் என்று, இருதரப்பிலும் எழுதி வாங்கிக் கொண்டு காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேசி முடித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

தேர்தலுக்கு முந்தின நாள் 18ந்தேதி காலையில் வீட்டின் படுக்கை அறையில் குழந்தைவேலு கட்டிலில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், கதவை உடைத்து சடலத்தை மீட்ட உறவினர்கள் அவரது சடலத்தை உடனடியாக அடக்கம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதல் சம்பவத்தில் எந்த ஒரு சட்டபூர்வ விசாரணையும் மேற்கொள்ளாத டி.எஸ்.பி தனசேகரன், கை.களத்தூர் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, தாக்குதல் வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்.ஐ பழனிச்சாமியை ஆயுதப்படைக்கு மாற்றியதுடன் அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும் ஏ.டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே தாக்குதல் வீடியோ வெளியானதை தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தின் போது தடுத்த பணியாளரிடம் புகார் பெற்று சக்திவேலுவை எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சக்திவேலு மீது 10 வருடத்துக்கு முன்பு சேகோ ஆலையில் ஆய்வுக்கு வந்த உணவுப்பொருள் பாதுகாப்பு பெண் அதிகாரியை சிறைவைத்த வழக்கும், ஆலையின் மேலாளரை தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது. ஹைடெக் வாழ்க்கை வாழ்வதற்கு இடையூறாக இருந்த தந்தை சொத்துக்களை பிரித்து தர மறுத்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக சக்திவேலு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments