ரூ 250 கோடி வசூலில் மோசடி மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு பங்கு கொடுக்காமல் இழுத்தடிப்பு
மஞ்சுமல் பாய்ஸ் படம் 250 கோடி ரூபாயை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 7 கோடி ரூபாய் முதலீடு செய்தவருக்கு 40 சதவீத லாப பங்கு தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய புகாரில், படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்
குணா படத்தின் ஒற்றை பாடலை வைத்து மெகா வெற்றியை தட்டித்தூக்கிய மஞ்சுமல் பாய்ஸ் படம் உலகமெங்கும் 250 கோடி ரூபாயை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்தது.
22 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் ஓடிடி உரிமமே 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர், அரூரை சேர்ந்த சிராஜ் என்பவரிடம் படத் தயாரிப்புக்கு 7 கோடி ரூபாய் முதலீடாக பெற்றதாகவும், 40% லாப வீதம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகின்றது.
பெரிய அளவில் லாபம் கிடைத்த பின்பும் குறிப்பிட்ட லாப வீதம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றி இழுத்தடிப்பதாக சிராஜ், எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
நீதிமன்ற உத்தரவின் பேரில் மரடு காவல் நிலைய போலீசார், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களான ஷோன் ஆண்டணி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோர் மீது மோசடி, கூட்டு சதி, நம்பிக்கை துரோகம், போலி தடயங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இவர்களின் பரவா பிலிம்ஸ் மற்றும் பார்ட்னர் ஷோன் ஆண்டனியின் வங்கி கணக்குகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Comments