சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரால் தீ வைப்பு.. பாதைத் தகராறில் விபரீதம்..!

0 746

விவசாய நிலத்திற்கு வழிவிடும் தகராறில் சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி ஓட ஓட விரட்டி லைட்டரால் தீ பற்ற வைத்த இளைஞரை காவேரிப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர்.

தன் மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரால் தீ பற்ற வைக்க முயலும் அண்ணன் மகனிடமிருந்து கடைக்காரர் தப்பி ஓட முயற்சிக்கும் காட்சிகளே இவை.

ஓட, ஓட விரட்டிச் சென்று லைட்டரால் தீ வைத்து விட்டு எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன். இவருக்கும் அவரது அண்ணன் மணி குடும்பத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாகவே நிலப் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று, நெல் அறுவடைக்காக தனது நிலம் வழியாக அண்ணன் மகன் செந்தில் கொண்டுச் சென்ற அறுவடை இயந்திரத்தை தடுத்துள்ளார் சின்னவன்.

அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறவே, செந்திலின் தாய் ராணி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சின்னவன் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தில் தான் நடத்தி வரும் மாட்டு தீவன கடையில் அமர்ந்திருந்தார் சின்னவன். இதனைப் பார்த்த செந்தில் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தான் ஏற்கனவே கேனில் எடுத்துச் சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

அவரிடமிருந்து தப்பிக்க சின்னவன் அங்கும் இங்கும் ஓடிய நிலையிலும் விடாமல் துரத்திய செந்தில் அவரை பிடித்து வைத்துக் கொண்டு லைட்டரால் தீயை பற்ற வைத்தார்.
உடலில், தீப்பற்றி எரியவே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரம் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செந்தில் அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த செந்திலை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments