அரசுப் பேருந்து ஓட்டுநர் நடுரோட்டில் புரட்டி எடுப்பு.. போதைக் கும்பல் அட்டகாசம்..!!

0 612

கும்பகோணத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்டு நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அடித்து துவம்சம் செய்ததோடு, அதனை வீடியோ பதிவு செய்த செய்தியாளர்களையும் தாக்கியதால் கைது செய்யப்பட்ட அந்த 5 பேர் தான் இவர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை இயக்கிச் சென்றார் ஓட்டுநர் ரமேஷ். அவருடன் நடத்துநராக பணியில் இருந்தார் செந்தில்குமார்.

கும்பகோணம் பாலக்கரையில் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் முன்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் இருந்த 4 பேர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், வழிகேட்டு ஹாரன் அடித்துள்ளார் ஓட்டுநர் ரமேஷ்.

தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த 4 பேரும், ஓட்டுநரிடம் நீ ஏன் ஹாரன் அடிக்கிறாய் என கேட்கவே அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த அவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நடுவழியில் அப்படியே நிறுத்தி விட்டு பேருந்திற்குள் ஏறி ஓட்டுநரை தாக்கத் துவங்கினர்.

அலறி அடித்துக் கொண்டு பயணிகளும் கீழே இறங்கவே, ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அடித்து உதைத்து கீழே தள்ளி அந்த கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. அந்த கும்பலுக்கு ஆதரவாக அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த அவர்களது நண்பர்கள் சிலரும் சேர்ந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தடுக்க முயன்ற பொதுமக்களையும் மிரட்டியது அந்த கும்பல். இதற்கிடையே, அவ்வழியாகச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் இதனை வீடியோ எடுத்ததோடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தங்களை வீடியோ எடுப்பது தெரிந்ததும் செய்தியாளர்களையும் தாக்கியது அந்த கும்பல். எனினும் தாக்குதல் நடத்தியவர்களில் சுதர்சன், ஜனார்த்தனன் ஆகிய இரண்டு பேரை பொதுமக்களோடு சேர்ந்து செய்தியாளர்கள் மடக்கி பிடிக்கவும் அங்கு போலீஸார் வந்து சேர்ந்தனர்.

போலீஸாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் செய்தியாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதலின் போதே தான் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் மோதிரம், வாட்ச் ஆகியவற்றையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டதாக தெரிவித்தார் ஓட்டுநர் ரமேஷ்.

தப்பி ஓடியவர்களில் பாலக்கரையைச் சேர்ந்த கார்த்திகேயன், உதயகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீஸார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments