தமிழகத்தில் ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வாழ்மங்கலம் கிராம வாக்குச்சாவடியில் காமாட்சி என்ற 101 வயதுப் பெண் வாக்களித்தார்.
புதுச்சேரியில் வசித்து வரும் தாம் வாக்களிப்பதற்காகவே பிறந்த ஊருக்கு வந்ததாகவும், அதுவும் தாம் படித்த பள்ளியிலேயே வாக்களித்ததாகவும் காமாட்சி கூறினார்.
நாகையில் வாக்களித்த 101 வயது பெண்ணான காமாட்சி
சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பம்மாள் என்ற 99 வயது பெண் தள்ளாடியபடி நடந்து சென்று வாக்கினை பதிவு செய்தார்.
நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் வாக்குச்சாவடியில் 95 வயதான முத்தம்மாள் என்ற பெண் தனது உறவினர்களுடன் சென்றுவாக்களித்தார்.
சிவகாசி காரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு தவழ்ந்தபடி சென்ற 85 வயது பெண் அன்னலட்சுமியை காவலர்கள் வீல் சேரில் அமர்த்தி அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்தனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வயது முதிர்ந்த பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். கோவில்பட்டி அருகே கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 88 வயது மூதாட்டி ராமலட்சுமி என்பவர் வாக்களித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சுகுணாபுரம் பகுதியில் மூதாட்டி குர்ஷித் பீவி என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்க அனுமதிக்கப்படாத நிலையில், தனக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை என வருந்தினார்.
கரூர் மாவட்டம், சின்னாண்டான் கோவில் சாலையில் உள்ள தனியார்பள்ளி வாக்குச்சாவடியில் கைத்தடி ஊன்றியபடி வந்த 93 வயதான மூதாட்டி ஒருவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் வாக்களித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள குமரகுருபரர் பள்ளியில் 90 வயதான ரங்கம்மா என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
Comments