மங்காத்தா சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.1.5 கோடி வழிப்பறிக் கொள்ளை சம்பவம்..! காதலி வீட்டில் ரூ 41 லட்சம் சிக்கியது
சென்னை மயிலாப்பூரில் கல்லூரி ஊழியரை தாக்கி ஒன்றரை கோடி ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை அடுத்த தாளம்பூரில் உள்ள அக்னி பொறியியல் கல்லூரியின் ஊழியர், கடந்த 2 ந்தேதி ரூ 1.5 கோடி ரூபாய் பணத்துடன் பைக்கில் கோட்டூர் புரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகி வீட்டுக்கு சென்றுள்ளார்.
வழியில் மயிலாப்பூரில் வைத்து 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்து கத்தியால் தாக்கி மொத்த பணத்தையும் பறித்துச்சென்றது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையை முன்னெடுத்த போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
பணம் கொண்டுச்செல்லப்படும் தகவலை யார் சொல்லி இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரித்த போது சுனில்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் மூலம் சுனில்குமாரை தொடர்பு கொண்டு மீண்டும் கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்படுதாக பொய்யான தகவலை போலீசார் கசியவிட்டனர்.
இதையடுத்து சுனில்குமார், தனது பகுதியில் இருந்து கிளம்பி அரக்கோணம் சென்றார். அங்கு அவரை பின் தொடர்ந்த போலீசார் அவரையும், பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவனாக செயல்பட்ட திலீப் என்பவனையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவத்துக்கு ஸ்கெட் போட்டுக் கொடுத்த பிரபல ஹவாலா கொள்ளையன் இம்ரானையும், கூட்டாளிகள் தினேஷ்குமார், நவீன், அசோக்,உலக நாதன், குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
தேர்தல் நேரத்தில் கொள்ளையடித்த பணத்தை பிரித்து எடுத்துச்சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று செங்குன்றத்தில் உள்ள திலீப்பின் காதலி வீட்டில் பணத்தை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார் 41 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். மீதம் உள்ள பணம் எங்கே என்று விசாரித்த போது , இந்த கொள்ளை சம்பவத்தில் 3 வழக்கறிஞர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததாக தெரிவித்த போலீசார், அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி ஹவாலா பணம் கொண்டு செல்லும் நபர்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிவித்தனர்.
அந்த வழக்கறிஞர்களின் தூண்டுதலால், மூன்று மாத காலம் திட்டமிட்டு, சிறையில் தனக்கு பழக்கமான கூட்டாளிகளை வைத்து திலீப் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறும் போலீசார் மீதம் உள்ள நபர்களை தேடிவருவதாக தெரிவித்தனர்.
Comments