10 வருடத்தில் ரூ 300 கோடி..! பி.எஸ்.ஜி குழும நிர்வாகியிடம் பணத்தை சுருட்டிய குடும்பம் ..!

0 823

கோவை பி.எஸ்.ஜி குழுமத்தின் நிர்வாகி ஒருவரிடம் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறி 10 ஆண்டுகளில் 300 கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டதாக கூறப்பட்ட புகாரில் தாய், மகள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் தொழில் அதிபர் சிவராஜ் இவர் பி.எஸ்.ஜி குழுமத்தின் டிரஸ்டிகளில் ஒருவராக உள்ளார்.

பல்வேறு தொழில்கள் செய்து வரும் இவர் காற்றாலை மின் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். இவர் 2013 ஆம் ஆண்டு சிந்துஜா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

மனைவியின் அறிமுகத்தின் பேரில் 2014 ஆம் ஆண்டு சேலத்தை சேர்ந்த அஸ்வின் குமார் என்பவரை கணக்காளராக பணியில் சேர்த்துள்ளார்.

அப்போது சிவராஜூக்கு வருமானவரி கட்டாதது குறித்த நோட்டீஸ் ஒன்று வருமானவரித்துறையில் இருந்து வந்ததாகவும், அந்த பிரச்சனையை சரி செய்வதாக கூறி அஸ்வின்குமார் முதலில் 5 கோடி ரூபாயை ரொக்கமாக பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் வருமானவரித்துறைக்கு முறையாக பதில் அளிக்காததால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்துள்ளனர்.

இதனை காண்பித்து பல கோடிகளை அஸ்வின்குமார் பெற்றதாகவும், இடையில் மனைவி சிந்துஜா, சிவராஜிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்ற நிலையில் சிவராஜின் தொழில் தொடர்பான வரவு செலவுகள் அனைத்தையும் அஸ்வின்குமாரே பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தனக்கு வேண்டப்பட்டவர்களை சிவராஜின் நிறுவனங்களில் உயர் பணிக்கு நியமித்து, ஏராளமாக பணத்தை சுருட்ட தொடங்கிய அஸ்வின் குமார் , ஒரு கட்டத்தில் வருமான வரித்துறை வரிப்பாக்கிக்காக உங்கள் சொத்துக்களை இணைக்க திட்டமிட்டுள்ளது என்று கூறி சொத்துக்களையும் ஏமாற்றி தன் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகின்றது.

இதனை தாமதமாக கண்டுபிடித்த சிவராஜ், தனது வழக்கறிஞர் கதிரேசன் உதவியுடன் இந்த மெகா மோசடி குறித்து அளித்துள்ள புகாரில் அஸ்வின் குமார் ,கடந்த 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றி கையெழுத்து பெற்று 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களையும்.

100 கோடி ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு மோசடி செய்து விட்டதாகவும், போலீசில் புகார் அளித்தார்.

சிவராஜின் புகாரின் பேரில் அஸ்வின்குமாரை தேடி வரும் போலீசார், மோசடிக்கு உடந்தையாக இருந்த வசந்த், சிவக்குமார் ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்திருந்தனர், தற்போது அஸ்வின் குமாரின் மனைவி ஷீலா, மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

3 பேரையும் 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அஸ்வின்குமாரை தேடிவருகின்றனர்

மனைவி சிந்துஜாவால் வீட்டுக்குள் உறவினர் என்று அழைத்துவரப்பட்ட அஸ்வின்குமார், அவரது நண்பர் என்றும், சிவராஜை விவாரத்து செய்து சென்ற பின்னர் சிந்துஜாவுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் வரை அஸ்வின்குமார் கொடுத்து வந்ததை கண்டுபிடித்துள்ளதாகவும் வழக்கறிஞர் கதிரேசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments