தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்..

0 199

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்  புவனகிரி பேருந்து நிலையம் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பெரம்பலூர்  தொகுதி  திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, வி.களத்தூர் கிராமத்தில் வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலு மதுரவாயலில் தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை அடையார், திருவான்மியூரில் திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கலைஞர், ஸ்டாலின் வேடமிட்டவர்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர். 

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், பள்ளப்பட்டி அடுத்த மண்மாரி என்ற இடத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்து வாக்கு சேகரித்தார். 

வடசென்னை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புளியந்தோப்பு பகுதியில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

புதுச்சேரி தொகுதி நா.த.க வேட்பாளரான சித்த மருத்துவர் மேனகா, மரபாலம், வேல்ராம்பட்டு பகுதிகளில் வாக்கு சேகரித்த போது,  முதியோர்களுக்கு நாடி பிடித்து பார்த்தும், ஸ்டெதஸ்கோப் வைத்து இருதய துடிப்பு பார்த்தும் மருத்துவ பரிசோதனை செய்து வாக்கு சேகரித்தார்.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளரான நாராயணசாமி போடி பகுதியில் இரண்டு கோயில்களில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ததோடு அப்பகுதியினரிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கூடல் அருகே மைலபுரத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கலியன்குளம், ஒ. துலுக்கப்பட்டி, ஓடைமறிச்சான் , உடையாம்புளி உள்ளிட்ட கிராமங்களில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனுடன் இணைந்து பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார்.

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து திரைப்பட நடிகையும், அதிமுக மகளிர் அணி துணை செயலாளருமான காயத்ரி ரகுராம் , அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி ஆகியோர் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரத்தில்  வாக்கு சேகரித்தனர். 

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், கடையநல்லூர் அருகே அருணாசலபுரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசுகறள் வெடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனுக்காக மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திருச்சி சிவா, தற்போது ஆளும் அரசு நல்ல அரசாக இருந்தால் அவர்களே தொடரட்டும் என பேசினார்.

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக தாயார் அம்மன் குளம், பிள்ளையார் பாளையம், புதுப்பாளையம், அண்ணா பார்க் உள்ளிட்ட பகுதிகளில் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளரான லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது பேசிய அவர், அதிமுக , பாஜக கள்ளக் கூட்டணி என்று சொன்னால், எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார் என்றார். ஆனால், மத்தியில் பாஜக கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை அதிமுக ஆதரித்துவிட்டு தற்போது எதிர்க்கிறோம் என்கிறார்கள் என்று முத்தரசன் கூறினார். 

நாகபட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் அவுரி திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.இதில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments