ரூ.4 கோடி பறிமுதல் நெல்லை தேர்தல் ரத்து? அதிகாரிகள் பரபரப்பு தகவல்

0 878

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி சோதனையிட்டனர்.

எஸ்-7 கோச்சில் பயணித்த 3 நபர்கள் எடுத்துச் சென்ற 6 பைகளை சோதனை செய்ததில், உடைகளுக்குள் மறைத்து வைத்து, பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்து போலீசார், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற சூட்கேசுகளில் மொத்தமாக நான்கு கோடி ரூபாய் பணம் இருந்தது.

அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான கீழ்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூடுதல் ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

கைப்பற்றப்பட்டப் பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பணம் கை மாறுவது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது எப்படி ? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நயினார் நாகேந்திரனின் புளு டைமண்ட் ஹோட்டல் ஊழியர்களான சதீஷ், நவீன் மற்றும் அவரது உறவினர் பெருமாள் ஆகிய மூவருக்கும் கொடுக்கப்பட்ட தகவலின் படி சென்னை பசுமைவழிச் சாலை, யானை கவுனி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று சில நபர்களிடமிருந்து சிறு சிறு தொகையாக பணத்தை பெற்று ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அதற்குப் பிறகு இரண்டு புதிய சூட்கேசுகளை வாங்கி அவற்றில் இவர்களின் உடைகளை வைத்து அதற்கு நடுவில் பணத்தை மறைத்து வைத்து பேக்கிங் செய்துள்ளனர்.

மூவரும் நெல்லைக்கு செல்வதற்காக கார் மூலம் கொண்டுச் சென்றால் வாகனத் தணிக்கையில் பிடி விடுவோம் என்பதனால் ரயில் பயணிகள் போல் செல்வதற்கு திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆனால், மூவருக்குமான டிக்கெட் உறுதி செய்யப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நயினார் நாகேந்திரனின் லெட்டர் பேடில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு EQ - முறையில் டிக்கெட்டை உறுதிப்படுத்த கடிதம் கொடுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் பரிந்துரையில் மூன்று பேர் பயணிப்பதால் இது தொடர்பாக தமிழக ரயில்வே காவல்துறையினர் அந்த பட்டியலை வைத்து சந்தேகமடைந்து அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments