தமிழகம் முழுவதும் தீவிர ஓட்டு வேட்டையில் அரசியல் கட்சியினர்.. வித்தியாசமான முறையிலும் விதவிதமான வாக்குறுதிகளுடன் வாக்கு சேகரிப்பு...

0 775

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அரசியல் கட்சியினர்... வித்தியாசமான முறையிலும் விதவிதமான வாக்குறுதிகளுடன் வாக்கு சேகரிப்பு...

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து சிம்மக்கலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் பயப்படுவதாக கூறினார்.....

தொடர்ந்து பேசிய அதிமுக வேட்பாளர் சரவணன், திமுக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாது என்றார்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்த வைகோ, கர்நாடக அரசு மேகதாதுவின் குறுக்கே அணை கட்டினால், சோழ நாடு பாலைவன நாடான எத்தியோப்பியா போல் மாறிவிடும் என்றார்.

தருமபுரி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பாலக்கோட்டில் பிரச்சாரம் செய்த நடிகை பபிதா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டதாக கூறினார்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து செல்லங்குப்பத்துக்கு பிரச்சாரம் செய்ய சென்ற துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின், ஏன் ஒரு முறை கூட எங்களை வந்து பார்த்து குறைகளை கேட்கவில்லை என வாக்குவாதம் செய்தனர்.

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, ராசிபுரம் பகுதியில் திருச்சி சிவா, அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புளியங்குடி, பாம்புக்கோவில்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, காஞ்சிபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சி நிர்வாகிகள் சிக்கன் பக்கோடா சமைத்துக் கொடுத்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, ஆத்தூர் பகுதியில் திமுக பெண் கவுன்சிலர் தலைமையில் வீடு வீடாகச் சென்று பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ கொடுத்து வாக்கு சேகரித்தனர்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அறந்தாங்கியில் பிரசாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம், இந்தியாவில் அடுத்த தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்பது நீங்கள் அளிக்கப்போகும் வாக்கில்தான் உள்ளது என்று மக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.

மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி, பின்னர் சுதாரித்துக்கொண்டு தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து, சங்கரன்கோவில் பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பிரதமர் மோடிக்குப் பதிலளிப்பதாக ஹிந்தியில் பேசினார்.

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அருப்புக்கோட்டை பகுதியில் அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, ஸ்பிக் நகர் பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எ.வ. வேலு வாக்கு சேகரித்தார்.

வேலூர் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து ஆம்பூர் பஜார் வீதியில் திறந்த வாகனத்தில் நடிகை விந்தியா பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து, குருவராஜப்பேட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாக்கு சேகரித்தார்.

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை ஆதரித்து அருப்புக்கோட்டை அருகே பிரச்சாரம் செய்த பட்டிமன்ற நடுவர் லியோனி, தமது மகள் ராதிகா பாஜக சார்பில் போட்டியிடுவதை பார்த்திருந்தால்  எம்.ஆர்.ராதா கண்ணீர் விட்டு அழுதிருப்பார் என்றார்.

வேலூரில் மீண்டும் போட்டியிடும் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் பிரச்சாரத்துக்காக சங்கரன்பாளையம் சென்றபோது, அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழ்நாட்டில் மத்திய அரசு தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்றார்.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக சமயநல்லூரில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் ஒ.பி.எஸ். அதே சின்னத்தின் மூலம் தேனி தொகுதியில் தாம் பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்றார்.

தருமபுரி அதிமுக வேட்பாளர் அசோகன், பாப்பிரெட்டிப்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், முல்லைவேந்தன் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

அரக்கோணம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அப்சியா நஸ்ரினை ஆதரித்து, ஆற்காடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், தேரிருவேலி ஜும்மா பள்ளிவாசலில் பிரசாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரித்தார்.

கரூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நன்னியூர் புதூரில் பிரசாரம் மேற்கொண்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத், அவரிடம் செங்கோல் கொடுத்து அதன் முன்னிலையில் வாக்கு சேகரித்தார்.

வட சென்னை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ராயபுரம் ஆடு தொட்டி சாலையில் துவங்கி ரங்கபிள்ளை தோட்டம், கல்லறை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வில்லிவாக்கத்தில் வாக்குச் சேகரித்தார்.

வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து புளியந்தோப், ஆடுதொட்டி கன்னிகாபுரம் கணேசபுரம் உள்ளிட்டஇடங்களில் நடிகை குஷ்பூ வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், திருப்புவனம் அருகே வெள்ளைகரை கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, இந்தப் பகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

காங்கேயம் அருகே சிவன்மலையில் ஈரோடு தி.மு.க. வேட்பாளர் பிரகாஷுக்கு ஆதரவாக அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பாரிராஜன், கையில் திருவோடு ஏந்தி ராமேஸ்வரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி, பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றவில்லை எனவும், மழை வெள்ளத்திற்கு ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

கரூர் மாவட்டம் தென்னிலை கடைவீதி பகுதியில் கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி கே வாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர், கோசனம், எம்மாம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் பிரசாரம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர், குளச்சல் திங்கள்நகர் பகுதியிலுள்ள தேநீர் கடை ஒன்றில் தேநீர் தயாரித்துக் கொடுத்தும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் வாக்கு சேகரித்தார்.

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், முருகமங்கலம் கிராமத்தில் நெசவாளர் ஒருவரது வீட்டில் பட்டுத் துணியை நெய்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

கடலூர் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான், நெய்வேலியை சுற்றி உள்ள பத்திரக்கோட்டை, மாம்பட்டு உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.

வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் வாக்குச் சேகரித்த ஆரணி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அ. கணேஷ்குமார், ஆரத்தி எடுக்க வந்த பெண்களை இருக்கையில் அமர வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தோட்டப்பாளையம், சார்பனாமேடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் கொள்ளிடம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை, பால்னாங்குப்பம் பகுதியில் சலவை தொழிலாளியின் கடையில் சட்டைக்கு இஸ்திரிபோட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து வாக்கு சேகரித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசாரம் செய்த போது வேட்பாளரின் பெயரை மாற்றி கூறினார்.

ராமநாதபுரம் தொகுதி ஐ.யூ.எம்.எல். வேட்பாளர் நவாஸ்கனி, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவயல் கிராமத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை எடுத்துக் கூறி ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் அனைத்து கள்ளர் கூட்டமைப்பைச் சார்ந்த தியாகராஜன் மதுரை மாவட்டம் தும்மக்குண்டு கிராமத்தில் கிரிக்கெட் பேட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக பேச்சிப்பாறையில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், இண்டியா கூட்டணியில் யார் பிரதமராக வேண்டும் என்பதை கூட்டணியை உருவாக்கிய மு.க.ஸ்டாலின் சொல்வார் என்றார்.

சிதம்பரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கூட்டணி கட்சியினருடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணியை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பின்பு பேட்டியளித்த அ.தி.மு.க அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், அனுராமர் நெஞ்சை பிளந்து காண்பித்தது போல எடப்பாடியார் தனது நெஞ்சை பிளந்து பா.ஜ.கவுடன் கூட்டணியில் இல்லை என்பதை நிருபிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments