எம்.எல்.ஏன்னா பயம்.. மக்கள்ன்னா சோதனை... நடுங்கும் தேர்தல் அதிகாரிகள்..! உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்குது..!
திமுக கொடி கட்டிய எம்.எல்.ஏ காரை மறித்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் , அந்த காரை சோதனை செய்யாமல் அனுப்பி விட்டு, எளிய மக்கள் பயணிக்கும் அரசு பேருந்தை மறித்து அவர்களின் உடமைகளை சோதனை செய்த கூத்து தென்காசி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது
தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்த டி.என்.புதுக்குடி சாலையில் , சங்கரன்கோவில் பி.டி.ஓ ராதா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் விதியை மீறி திமுக கொடியுடன் வந்த எம்.எல்.ஏ ராஜாவின் காரை மறித்தனர்
காருக்கு வெளியே இருந்த திமுக கொடியை அகற்ற சொல்லாமலும், உள்ளே இருந்த எம்.எல்.ஏ ராஜாவை பார்த்ததும் அவரது காரை சோதனை செய்யாமலும், 10 வினாடியில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்
அவருக்கு பின்னர் வந்த சாமானியர்களின் கார்களை அடுத்தடுத்து மறித்து நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததோடு, ஓட்டுனரையும் காரில் இருந்தவர்களையும் கீழே இறக்கி, காரின் அனைத்து கதவுகளையும் திறந்து காருக்குள் இருந்த பைகளில் என்ன இருக்கின்றது ? என்று சின்சியராக தேடினர். ஒன்றும் சிக்கவில்லை
அந்தவழியாக புதிய தமிழகம் கொடியுடன் வந்த காரை மறித்து , கொடியை அகற்ற வைத்தனர், காரையும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்
எல்லாத்துக்கும் உச்சகட்டமாக எளியமக்களின் வாகனமான அரசு பேருந்தை மறித்து உள்ளே ஏறிய போலீசார் பயணிகளின் பைகளை வாங்கி சோதித்த கூத்தும் அரங்கேறியது
சாதாரண மக்கள் செல்லும் அரசு பேருந்தை மறித்து சோதனையிட்ட நீங்கள் எதற்காக எம்.எல்.ஏவின் வாகனத்தை சோதனை யிடாமல் அனுப்பி வைத்தீர்கள் ? என்று பறக்கும்படை அதிகாரி ராதாவிடம் கேட்ட போது, எம்.எல்.ஏ காரில் கொடி கட்டுவதற்கு அனுமதி பாஸ் வைத்திருந்ததாகவும், அதனை வாங்கி பார்த்து விட்டு அனுப்பியதாகவும் மலுப்பலான பதிலை தெரிவித்தார்
இது குறித்து தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகுவிடம் கேட்ட போது, பாரபட்சம்மின்றி சோதனை நடத்தப்படுவதாகவும், அப்படி புகார்கள் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்
அரசியல் வாதிகளை விட்டு விட்டு சாதாராண மக்களை மட்டும் சோதனை என்ற பெயரில் வாட்டி வதைப்பதை பறக்கும் படை அதிகாரிகள் செய்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
அண்மையில் கோவையில் இருந்து ஊட்டிக்கு குடும்பத்தோடு வாடகைக்காரில் வந்த பஞ்சாப் சுற்றுலா பயணிகளை மேட்டுபாளையம் சாலையில் மறித்த பறக்கும் படை அதிகாரிகள் , அந்த குடும்பத்தினர் செலவுக்கு வைத்திருத்த 69400 ரூபாயை பறித்ததோடு, செலவுக்குகூட பணம் கொடுக்காமல் நடு ரோட்டில் அழ விட்டு, இதுவரை இல்லாத வகையில் அளவுக்கு அதிகமாக தங்கள் கடமை உணர்ச்சியை காட்டியது குறிப்பிடதக்கது.
Comments