டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராக 9 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதம் எனக் கூறி, விசாரணைக்கு ஆஜராக அவர் மறுத்து வந்தார்.
கைது நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது. இந்நிலையில் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு கெஜ்ரிவாலை கைது செய்து தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலகமாட்டார் என்றும், சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்வார் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நான்காவது நபராக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments