நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், மருதூர் சோதனைசாவடியில் வாகன சோதனையின்போது இரு வேறு நபர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 5 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளத்தில் நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு சங்கரன்கோவில் உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு குமலன்குட்டை பகுதியில் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேற்கு கடற்கரை சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்ல் 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 4 காணொலி கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளது.
திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான காணூர் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments